தமிழில் பெயர் வைத்தால் போதாது!

தமிழில் பெயர் வைத்தால் போதாது!
Updated on
2 min read

திமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதெல்லாம், பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். பலரது வீடுகளில் ஆங்கில மற்றும் வட மொழி தாக்கத்துடன் பெயர் வைக்கும் பழக்கம் இருப்பதை மாற்றும் வகையில் அவர் எடுத்துவரும் முயற்சி பாராட்டுக்குரியதே.

தமிழ்ப் பெயர்கள் மற்றும் அதற்கான பொருள் விளக்கம் எந்த இணையதளத்திலும் கிடைப்பதில்லை என்று வாசகர் ஒருவர் குறைபட்டுக் கொண்டதை அடுத்து, ‘‘குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் மற்றும் அதற்கான பொருள் அடங்கிய இணையப் பக்கம் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தொடங்கப்படும்’’ என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். வருங்காலத்தில் குழந்தைகளின் பெயர்கள் அதிக அளவில் தமிழில் இருப்பதற்கான முயற்சியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதேநேரம், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் நாள்தோறும் புதிது புதிதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் புழக்கத்துக்கு வருகின்றன. இவை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. அவற்றை இளைய தலைமுறை மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள்கூட மொழிமாற்றம் செய்ய முடியாமல் ஆங்கில சொல்லாகவே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

உதாரணமாக, Data card, Ear phone, Smart phone, Smart TV, Artificial Intelligence, Chatbot, Fibre cable, Wifi, Bluetooth, Disc brake, Tubeless tyre, Default, Restart, Encrypted Data, Smart speaker, Malware, Firmware, Ethical hacking, GIF file, Tweet, Insta post, Instastory என நவீன காலத்தில் இளைஞர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதுமட்டுமின்றி, தத்கால், சதாப்தி, கரீப் ரத், தேஜஸ், யோஜனா போன்ற வடமொழி சொற்களும் மத்திய அரசு திட்டங்கள் வாயிலாகவும், மத்திய அரசு துறைகள் வாயிலாகவும் சர்வ சாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

இது போன்ற சொற்கள் புழக்கத்துக்கு வந்து, அது மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட பிறகு, அதற்குரிய தமிழ் சொற்களை கண்டறிந்து அவற்றை பயன்படுத்தும்படி மக்களை வற்புறுத்துவதே தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது.

புதிய சொற்கள் புழக்கத்துக்கு வரத் தொடங்கும்போதே தமிழ் அறிஞர்கள் கூடிப்பேசி அதற்கு பொருத்தமான தமிழ் சொற்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உடனடியாக அறிவிக்க வேண்டும். அதற்கென இணையப் பக்கம் உருவாக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட சொற்களில் சிலவற்றுக்கு நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தும் பத்திரிகைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஊடகங்களில் ஒரே சீரான வார்த்தை பயன்பாடு இல்லாததால் அது மக்களை சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது.

பெரும்பாலான சொற்கள் பிரபலமான ஊடகங்கள் வாயிலாகவே மக்களை சென்றடைகின்றன. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர் கள் அடிக்கடி கூடிப்பேசி, இதுபோன்ற சொற்களுக்கு பொருத்தமான தமிழ் சொற்களை ஒரே சீராக அனைத்து ஊடகங்களிலும் பயன்படுத்தினால் அது மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in