

பர்கூர் தொகுதி திமுக எம்எல்ஏ மதியழகன் சட்டப்பேரவையில் சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு சலுகை வழங்க முன்வருமா? என்பதே அவரது கேள்வி.
‘‘நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிஹாரின் மக்கள்தொகையும், தமிழகத்தின் மக்கள்தொகையும் ஒரே அளவில் இருந்தது. தற்போது பிஹாரின் மக்கள்தொகை தமிழகத்தைவிட 4 கோடி அதிகம். மக்கள்தொகையை அடிப்படையாக வைத்துதான் மத்திய அரசு நிதிப்பகிர்வு உள்ளிட்ட விஷயங்களைச் செய்கிறது. தொகுதி மறுசீரமைப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, 3-வது குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு அரசு சலுகை வழங்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார். அவரது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் உள்ளாட்சி தேர்தல்களில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிவிட்டு, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். தெலுங்குதேச எம்பி அப்பால நாயுடு, மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு பரிசுத் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளார். பெண் குழந்தை என்றால் ரூ.50,000 வைப்புத்தொகை, ஆண் குழந்தை என்றால் மாடு அல்லது கன்று இலவசம் என்று அறிவித்துள்ளார்.
‘‘தென் மாநிலங்களில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் பிஹார், உத்தர பிரதேசம் அதிக இளைஞர்களைக் கொண்டுள்ளது. எனவே, ஜனத்தொகையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் சந்திரபாபு நாயுடு.
‘நாமிருவர் நமக்கிருவர்’ என்று தெருத் தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு, பல ஆண்டுகளாக மக்கள்தொகையை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், தவறு செய்துவிட்டோமோ என்று மக்களையே யோசிக்க வைக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் பேசி வருவது குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறது. இன்றைக்குள்ள பொருளாதார சூழலில் ஒன்றிரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரே குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய திணறி வருகின்றனர்.
மக்கள்தொகையின் அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பின்போது அதிக தொகுதிகளை மாநிலத்துக்கு பெறமுடியும் என்ற அவசரமான முன்முடிவின் அடிப்படையில் ‘மக்கள்தொகையை பெருக்கிக் கொள்ளலாம்’ என்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய ஆபத்தின் அடையாளம். இன்றைக்கு தமிழகம் பல துறைகளில் முன்னணியில் இருப்பதாகநாம் மார்தட்டிக் கொள்வதற்கு முக்கிய காரணமே, இதற்கு முன்பு ஆண்ட அரசுகள் தொலைநோக்குப் பார்வையுடன் குடும்பக் கட்டுப்பாட்டை இங்கே சீரிய முறையில் அமல்படுத்தியது தான்!
அப்படியிருக்க நாடாளுமன்றத்தில் வாதாட அதிக தொகுதிகள் வேண்டுமென்று சொல்லிக் கொண்டு இங்கே மறுபடியும் மக்கள்தொகையை பெருக்க ஆரம்பித்தால் இந்தியாவில் இன்னும் முன்னேறாத பல மாநிலங்களின் நிலைமைக்கு நாமும் தள்ளப்படும் நிலை வரலாம். அரசுகள் அளிக்கும் இலவசங்களைஏந்திக் கொள்வதற்கு வேண்டுமானால் இன்னும் இரண்டு கைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் கூடலாமே தவிர, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு ஒருகாலும் அது உதவாது.