

இந்தியாவின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி சுஜுகியின் தலைவர் ஆர்.சி.பார்கவா, சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி, சிறிய அளவிலான கார்களின் விற்பனை இந்த ஆண்டு 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த கார்களின் விற்பனை 43 லட்சமாக உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 2 சதவீத வளர்ச்சி மட்டுமே என்பதையும் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் கார்களின் விற்பனை குறைந்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ள அவர், இன்றைக்குள்ள வரி விகிதங்களைப் பார்க்கும்போது, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கு அதிகம் உள்ளவர்களால் மட்டுமே கார்களை வாங்க முடியும் என்ற நிலை இந்தியாவில் உள்ளது. இந்த வருமான வரம்பில் 12 சதவீதம் பேர் மட்டுமே இருக்கின்றனர். நாட்டில் 88 சதவீதம் பேர் கார் வாங்க முடியாத பொருளாதார நிலையில் இருக்கும்போது, கார் வாகன விற்பனையில் எப்படி வளர்ச்சியை எட்ட முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
நகரங்களைப் பொறுத்தமட்டில், கார்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது என்று ஒருபுறம் நாம் வருத்தப்பட்டாலும், ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை எட்டும்போது, அந்த நாட்டின் மக்களும் பொருளாதார ரீதியில் முன்னேறியிருக்க வேண்டும். அதற்கு கார், வீடு உள்ளிட்டவை குறியீடுகளாக பார்க்கப்படுகின்றன.
மாருதி தலைவர் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரங்களின்படி பார்க்கும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 88 சதவீதம் மக்களைச் சென்றடையவில்லை என்றும் பொருள் கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு எந்த அளவுக்கு மக்களுக்கு பலனளிக்கும் என்பதிலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு மற்ற அத்தியாவசிய தேவைகள் அதிகம் இருக்கும்போது, மிச்சமாகும் பணத்தை கார் வாங்க செலவழிப்பார்கள் என்பது சந்தேகமே என்று குறிப்பிட்டுள்ளதுடன், 2025-26 காலகட்டத்திலும் கார் வாகன விற்பனை வளர்ச்சி 1 முதல் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் 1,000 பேருக்கு 34 கார் மட்டுமே உள்ளது என்பது நமது பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவு என்று கூறப்படுகிறது. மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கிய குறியீடாக கருதப்படும் கார்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவும், சராசரி எண்ணிக்கை குறைவும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக அமைந்துள்ளது.
உலகில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த வளர்ச்சி மக்களின் வீடுகளில் எதிரொலிக்கவில்லை என்பது தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அம்சமாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதும், அதற்கான இடையூறுகளைக் களைவதும் அரசு அமைப்புகளின் கடமையாகும்.