

சென்னையில் உள்ள தியாகராய நகர் என்கிற பெயருக்குச் சொந்தக்காரரான பிட்டி தியாகராயர் நீண்ட காலப் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர். ஏறத்தாழ நூறாண்டு களுக்கு முன்பு தோன்றிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குக் கால்கோள் இட்டவர்களுள் முக்கியமானவர்.
1852 ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் பிறந்த தியாகராயர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பின்னர் நெசவு, தோல் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்ட தியாகராயருக்கு அரசியலில் ஆர்வம் பிறந்தது. 1884ஆம் ஆண்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரியர் ஜி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பெருமக்களால் சென்னை மகாஜன சபை என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் உருவாக்கத்தில் தியாகராயர் முக்கியப் பங்கு வகித்தார்.