சமரசமில்லாத எழுத்து
பானு முஷ்டாக் ஒரு கன்னட எழுத்தாளர், வழக்கறிஞர், களப்பணியாளர். குழந்தைப்பேறுக்குப் பிறகான மனச்சோர் விலிருந்து வெளிவருவதற்கு எழுத ஆரம்பித்த பானு, இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். வேறு இந்திய மொழிகளுக்கு மொழிமாற்றப்பட்டிருந்தபோதிலும், ஆங்கிலத்திற்கு வெகு சமீபத்திலேயே இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. ஆங்கிலத்தில் வெளிவந்த உடனேயே அதிகபட்ச கௌரவமான புக்கர் இறுதிப் பட்டியலில் பானு இடம்பெற்று விட்டார். புக்கர், சர்வதேச அளவில் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதுகளில் முக்கியமானது.
கடந்த பத்தாண்டுகளின் புக்கர் பட்டியல்களை ஆய்வுசெய்தால் பெரும்பான்மை நூல்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரிய வரும். ஆட்வுட் போன்ற மிகச்சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய அதிபுனைவுக் கதைகள் விதிவிலக்கு. 2022இல் புக்கர் வென்ற இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீயின் ‘ரேட் சமாதி’ (‘மணல்சமாதி’ என்கிற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது) போல் பானுவின் ‘ஹார்ட் லேம்ப்’ (Heart Lamp) முழுவதும் இந்தியத்தன்மை நிறைந்தது. குறிப்பாகத் தென்னிந்திய முஸ்லீம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கதைகள் இவை. கீதாஞ்சலி போலவே மூன்று, நான்கு மொழிகளின் வார்த்தைகளைக் கதைகளில் உபயோகித்திருக்கிறார் பானு.
