

உலகப் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்று குவர்னிகா. பாப்லோ பிக்காசோவின் ஓவியங்களும் விஷேஷமானதும்கூட. நீலக் காலகட்டம், ரோஜாக் காலகட்டம் என நீலம், பச்சை, சிவப்பு, வெளிர் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விருப்பத்துடன் ஓவியங்கள் தீட்டுபவர். ஆனால், அதற்கு மாறாக கறுப்புவெள்ளையில் வரையப்பட்ட ஓவியம் இது. இந்த ஓவியம் கலை இலக்கிய வெளியில் தாக்கத்தை விளைவித்த ஒன்று. இந்தப் பாதிப்பில் கவிதைகள் பல எழுதப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் வட எல்லைப் புற நகரமான குவர்னிகா என்னும் சிறிய நகரத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. 1937, ஏப்ரல் 26ஆம் தேதி, அது ஒரு திங்கள் கிழமை. அன்று அங்கு சந்தை கூடும் நாள். காலையிலிருந்து சனக்கூச்சலும், நெருக்கடியுமாகக் காணப்பட்ட சந்தையின் பரபரப்பு சற்றே தணிந்த பிற்பகல் பொழுது, 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையிலிருந்து திடீரெனப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றைக் காலையிலிருந்து பரபரப்பாக இயங்கிக் களைத்த மக்கள் கவனித்திருக்கவில்லை.