

மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமம் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய பகுதியாக நீடித்துவருகிறது. அங்கு 600 மீட்டர் நீளம் 12 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் இடிக்கப்பட்டதில் இருந்தே அப்பகுதி தமிழகம் முழுவதும் பிரபலம். தமிழகத்தின் ஒரு கிராமம் நல்ல விஷயத்திற்காக பிரபலமாக இருந்தால் அதற்காக பெருமைப்படலாம்.
ஆனால், தீண்டாமை, சாதி பாகுபாடு உள்ளிட்ட பிற்போக்கான விஷயங்களுக்காக பிரபலமடையும்போது தமிழர்கள் அனைவருமே தலைகுனியும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. சுவர் விவகாரம் முடிந்தபின், அங்குள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில், ஸ்ரீமுத்தாலம்மன் கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட அனுமதிப்பதில்லை என்ற விவகாரம் கிளம்பியது.
இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டு நீண்டகாலமாக பூட்டப்பட்ட கோயிலை திறந்து அனைவரும் சரிசமமாக வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. சாதிய பாகுபாட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதை எதிர்த்து மாநில அரசே மேல்முறையீடு செய்தது துரதிருஷ்டவசமான செயலாகும்.
அதுமட்டுமின்றி, கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாடு நடத்த அனுமதியளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மாநில அரசே வாதிட்டது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும். மாநில அரசின் வாதத்தை ஏற்க மறுத்து, கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த உதவும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டியது.
ஒருவழியாக பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோயில் திறக்கப்பட்டு மற்ற பிரிவினருக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களும் வழிபாடு நடத்த சில தினங்களுக்கு முன் அனுமதியளிக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலுக்கேபோகாத அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கோயிலில் வழிபாடு நடத்தியது சட்டப் போராட்டத்தின் வெற்றியாகவே அமைந்தது.
ஆனால், மற்ற சாதியினரைப் போல் பொங்கல் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மற்றொரு சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. பொங்கல் வைக்க அனுமதிக்கும்படி உத்தரவில் குறிப்பிடவில்லை என்று காவல்துறையினர் விளக்கமளித்து, இன்னுமொரு சட்டப் போராட்டம் நடத்த தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்தித்திருப்பது பண்பாடற்ற செயலாகும்.
மொத்தத்தில் அன்று நடந்த ஆலயப் பிரவேசம் போன்ற புரட்சிகரமான முன்னெடுப்புகள் இன்றுவரை மீண்டும் அரங்கேற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதையே உத்தபுரம் நிலவரம் காட்டுகிறது. சமூகநீதி காக்கும் அரசு என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் திமுக-வின் தலைவர்களும், அமைச்சர்களும் ஒன்றுசேர்ந்து உத்தபுரம் மாரியம்மன் கோயிலில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதோடு, இந்த விஷயத்தில் எதிர்ப்பு காட்டக்கூடிய சமூகத்தின் முக்கியஸ்தர்களை தங்களோடு சேர்த்து அந்த பூஜை வழிபாடுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இதை ஓட்டு அரசியலுக்கு பயந்து செய்யத்தவறுவதோ, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று காரணம் காட்டி விலகி நிற்பதோ கூடாது. சொல்லில் மட்டுமின்றி செயலிலும் எப்போதும் சமூகநீதி காக்கும் அரசு தான் என்று உறுதிப்படுத்த உத்தபுரம் இன்னொரு வாய்ப்பு.