சென்னை பேரிடர்: அபாயம் இன்னமும் தொடர்கிறது!

சென்னை பேரிடர்: அபாயம் இன்னமும் தொடர்கிறது!
Updated on
3 min read

2015 டிசம்பரில் சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தை மறந்துவிட முடியாது. சுமார் 421 உயிர்களைப் பலி வாங்கி, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த அந்த வெள்ளம், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பாழ்படுத்தியது. செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கத்திலிருந்து ஒரே சமயத்தில் நீரை வெளியேற்றியதுதான் இந்த வெள்ளத்துக்குக் காரணம் என்றே சாமானிய மக்கள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை கருதுகிறார்கள். மத்திய அரசின் தணிக்கைசார் நிறுவனங்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளன. ஆனால், 2015 வெள்ளத்துக்கு, செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் மட்டுமே முழுக் காரணம் அல்ல என்பதுதான் அறிவியல் கூறும் உண்மை. இதுபோன்ற பாதிப்புகளுக்கு மிக முக்கியக் காரணம், அறிவியல்பூர்வமற்ற நகர்ப்புற வளர்ச்சிதான்!

சுமார் 60 – 70 ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் அறிவியல்பூர்வமற்ற நகர்ப்புற வளர்ச்சியால், மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அவலமான நிலையில்தான் இன்றைய சென்னை மாநகரம் உள்ளது. நானும் எனது ஆராய்ச்சி மாணவர்கள் ஆ.விஜய், செ.தினேஷ் ஆகியோரும் இணைந்து ‘மோடிஸ்’ (MODIS), இந்திய செயற்கைக்கோள் மற்றும் ‘ஜியோ-ஐ’ (GeoEye) போன்ற செயற்கைக்கோள்களின் படங்களை வைத்து நடத்திய ஆய்வில், சென்னை நகரத்தின் அறிவியலற்ற அபரிமிதமான வளர்ச்சியே இப்பேரிடருக்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது.

பல்வேறு அபாயங்கள்

இவ்வாராய்ச்சி, சுமார் 40 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான கட்டுரையாக ‘நேச்சுரல் ஹஸார்ட்ஸ்’ எனும் சர்வதேச இதழில் பிரசுரிக்கப்பட்டு, பல அறிவியல் மட்டங்களிலே விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்தியத் தட்டு வடக்கு நோக்கி அழுத்தப்படுவதால், சென்னை மேலும் கீழுமாக உயர்ந்தும், தாழ்ந்தும், வளைந்துகொண்டும் இருக்கிறது. ஆவடியிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் வரை காணப்படும் கிழக்கு மேற்கான பூமியின் மேல்நோக்கிய வளைவினால் இப்பகுதி சற்று மேட்டுப் பகுதியாக உள்ளது. ஆனால், சென்னையின் வடக்கே புழல் ஏரி, தெற்கே கற்றம்பாக்கம் – வேளச்சேரி பகுதிகளிலும் கிழக்கு மேற்காக பூமி கீழே வளைந்து சென்றுகொண்டிருப்பதால், இப்பகுதிகள் இயற்கையாகவே பள்ளமான பகுதியாக உள்ளன. இது போன்ற வடக்கு நோக்கிய அழுத்த சக்தியால் சென்னையில் பல திசைகளிலும் பூமியில் ஆழமான வெடிப்புகள் உருவாகிவருகின்றன. வெடிப்பு ஏற்பட்ட நிலப்பகுதிகள் கொஞ்சம்கொஞ்சமாகக் கீழே சென்றுகொண்டிருக்கின்றன. சென்னை நேமம் பகுதியை உதாரணமாகச் சொல்லலாம்.

இப்படிப்பட்ட நில அசைவுகளினால் பழைய பாலாறு மற்றும் தற்கால கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு போன்ற நதிகள் கொஞ்சம்கொஞ்சமாக தெற்காகத் தடம்மாறிவருகின்றன. இதன் காரணமாக, சென்னை மாநகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அந்நதிகளின் பழைய பாதைகளும் புதையுண்ட நதிகளும் உருவாகியிருக்கின்றன. இந்த அழுத்த சக்தியால் ஆரணியாறு, கொத்தலையாறு, கூவம் மற்றும் அடையாறு போன்ற நதிகள் பல இடங்களில் திடீரென்று செங்குத்தாக வளைந்து ஓடுவதோடு பல இடங்களில் மண்புழுபோல வளைந்தும் நெளிந்தும் ஓடுகின்றன.

சென்னையின் இயற்கை

மேற்கூறிய செயற்கைக்கோள் படங்கள்சார் ஆய்வுகளின் மூலம் சென்னை தொடர்பான பல முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சென்னையில் கடல் முன்பொரு காலத்தில் மேற்கே ராமாவரம் வரை இருந்ததாகவும் பின்னர் நில அசைவுகளால் கொஞ்சம்கொஞ்சமாகப் பின்வாங்கி தற்கால மெரினா கடற்கரையை அடைந்தது என்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவருகிறது. கடல் பின்வாங்கியபோது, அது வடக்குத் தெற்காக மணல்மேடுகளையும் அவற்றுக்கு இடையிடையே அடித்தளத்தில் களிமண் கொண்ட நீளமான ‘ஸ்வேல்’ (Swale) என்று கூறப்படுகின்ற பள்ளங்களையும் உருவாக்கியிருக்கிறது. ஆகவே, சென்னையின் புவி அமைப்புப்படி வடக்கே புழல் ஏரிப் பகுதியும், தெற்கே கற்றம்பாக்கம் – வேளச்சேரி பகுதியும் இயற்கையான பள்ளப் பகுதியாக இருப்பதோடு, பூமி வெடிப்புகளால் நேமம் போன்ற பகுதிகளில் பூமி கீழே சென்றுகொண்டிருக்கின்றன. இயற்கையாகவே இப்பகுதிகள் வெள்ளத்தால் தாக்கப்படக்கூடியவை.

நதிகளின் பழைய பாதைகளும் புதையுண்ட பகுதிகளும் மழைக் காலங்களிலே இயற்கையான நீர் தாங்கி மற்றும் நீர்க்கடத்திகளாகச் செயல்படுகின்றன. செங்குத்தாக வளைந்தும் மண்புழுபோல் நெளிந்தும் ஓடும் நதிகள் / நீரோடைகள் மழைக் காலங்களில் நீரோட்டத்தை இயற்கையிலேயே தடுப்பவை என்பதால், அவை அவற்றின் அருகில் வெள்ளத்தை உருவாக்கக்கூடியவை. மேற்கே ராமாவரத்திலிருந்து தற்கால கடற்கரை வரை வடக்குத் தெற்காக உள்ள கடந்தகால மணல்மேடுகள் இயற்கையாகவே தண்ணீரை உறிஞ்சும் சக்தி கொண்டவை. அவற்றுக்கு இடையிடையே உள்ள வடக்குத் தெற்கான பள்ளங்கள் களிமண்ணால் ஆனவை என்பதால், வெள்ளத்தைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. ஆக, சென்னை நகர்ப்புறப் பகுதி நிலவியல்ரீதியாகத் தனித்தன்மை வாய்ந்த பகுதியாகும்.

தொடரும் அலட்சியம்

சென்னை நகர்ப்புற வளர்ச்சியானது, சென்னையின் புவி அமைப்பையோ புவியியல் செயல்பாடுகளையோ அறிந்துகொண்டதாகவோ, கணக்கில்கொண்டதாகவோ தெரியவில்லை. கடந்த 60-70 ஆண்டுகளாக இயற்கையான பள்ளங்கள், புதையுண்ட நதிகள், அவற்றின் பழைய பாதைகள் என்று பல்வேறு இயற்கை அமைப்புகளைக் கொண்ட இடங்களில் நகர்ப்புற வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஓடைகள் தடுக்கப்பட்டு அங்கு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மணல்மேடுகளும் பள்ளங்களும் சமப்படுத்தப்பட்டு இரக்கமற்ற முறையில் சென்னை நகர்ப்புற வளர்ச்சி அரங்கேறியிருக்கிறது. இந்நிலை, இன்னமும் தொடர்கிறது.

ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது பற்றிச் சொல்லவே வேண்டாம். நதியின் பழைய வெள்ளப் படுகைகளிலும் பழைய பாதைகளிலும் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையமும், பக்கிங்காம் கால்வாய்ப் போக்கை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் பாதையும் முறையற்ற சென்னை மாநகர வளர்ச்சியின் முக்கிய உதாரணங்கள். பள்ளிக்கரணை போன்ற இயற்கையான கடலோர நீர்நிலைகள் குப்பை கொட்டும் தளமாக அமைந்திருப்பது இன்னும் கொடுமை!

2015 வெள்ளத்தின்போது, அடையாறு நதியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், பக்கிங்காம் கால்வாயும் கருணை காட்டி வெள்ளத்தைக் கடலிலே தள்ளியிருக்காவிடில், சென்னை பெரும் பாதிப்பைச் சந்திக்க நேர்ந்திருக்கும். இத்தனைக்குப் பிறகும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் நிலவியல் அமைப்புகளை அறிந்து தீட்டப்படுகின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆழமான புவி அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் வெள்ளத் தடுப்பு, முன்னேற்பாடுகளுடன் கூடிய வளர்ச்சி மேற்கொள்ளாவிடில் சென்னை நகரம் எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெள்ளம்சார் பேரிடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்!

- சோம.இராமசாமி,

புவி அறிவியல் துறைப் பேராசிரியர், தொலையுணர்வுத் தொழில்நுட்ப நிபுணர், தொடர்புக்கு: smrsamy@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in