

நட்சத்திரங்களின் ஒளியில் சிந்துவெளி நாகரிகப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு தன் நூற்றாண்டை நடத்துகிறது. அதன் நிறைவு விழாவில் சிந்துவெளி எழுத்துமுறையைப் புரிந்துகொள்ள உதவும் வழியைத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணர்வோருக்கு ரூ.8.5 கோடி பரிசைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, குஜராத்தின் துவாரகா கடல் பகுதிகளில் நீருக்கு அடியில் மீண்டும் ஓர் ஆய்வுப் பணி தொடங்கியிருக்கிறது. ஒன்பது பேர் அடங்கிய மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுக்குழு இதில் ஈடுபட்டிருக்கிறது.
ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் பஞ்ச திராவிட நாடுகள் என்கிற பெயரில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகியவற்றைச் சிந்துவெளியுடன் இணைக்கிறார். திராவிட குஜராத், திராவிட மகாராஷ்டிரம் என்று தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனின் ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த மகத்தான முயற்சிகளில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மகாநதியாகப் பெருக்கெடுக்க வேண்டிய காவிரிச் சமவெளியின் ஆய்வு தேங்கி நிற்கிறது.