யாருக்காக போராடுகிறார் இளையராஜா..?

யாருக்காக போராடுகிறார் இளையராஜா..?

Published on

பழைய படங்களில் பிரபலமடைந்த பாடல்களின் ஓரிரு வரிகளை தற்போது வெளியாகும் படங்களில் ஆங்காங்கே முக்கிய காட்சிகளில் இசைத்து திரைக்காட்சிகளுக்கு சுவையூட்டும் நிகழ்வுகள் சமீபகாலமாக நடந்து வருகின்றன. இதில், இசையமைப்பாளர் இளைய ராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது அவ்வப்போது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தில், இளையராஜாவின், ‘கண்மணி அன்போடு, காதலன் நான் எழுதும் கடிதமே…’ பாடலை இணைத்திருந்ததை எதிர்த்து, தயாரிப்புக் குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதேபோல, தற்போது நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள, ‘குட், பேட், அக்லி’ படக்குழுவுக்கும் ரூ.5 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அஜித் படத்தின் மூலம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், ‘‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே… உள்ளிட்ட சில பாடல்கள் கோடிக் கணக்கில் விற்பனையாகியும் எங்களுக்கு ஒரு பைசா கூட வரவில்லை. அதனால், அதன்பிறகு இசைக்கப்பட்ட பாடல் உரிமைகளை நாங்கள் வைத்துக் கொண்டோம்.

ஏழு கோடி ரூபாய் கொடுத்து ஒரு இசையமைப்பாளரை நியமிக்கிறீர்கள். அவரது பாட்டு ஹிட் ஆகவில்லை. எங்கள் பாட்டை எடுத்துப் போடுகிறீர்கள். அதற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்; விசிலடிக்கிறார்கள்; ஆட்டமாடுகின்றனர். அதற்கு எங்களுக்கு கூலி வர வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.

ஒரு இசைக்கலைஞரின் படைப்பை அவரது அனுமதியில்லாமல் பயன்படுத்துவது நியாயமற்றது. காப்புரிமையைத் தாண்டி அனுமதிக்கப்பட்ட பாடல்களை பயன்படுத்துவதற்கும், அனுமதி பெறாமல் மற்றவரின் படைப்பை பயன் படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. திரையில் வரும் ஒரு காட்சிக்கும் காலகட்டத்திற்கும் பழைய பாடல் ஒன்று வலுசேர்க்கும் என்றால் அதை இயல்பாக பயன்படுத்த நினைப்பதில் தவறில்லை.

ஆனால், அந்தப் பாடலுக்கு யார் உரிமை வைத்திருக்கிறார்களோ, அவர்களிடம் அனுமதி கேட்டுப் பெற்று, அவர்கள் கேட்கும் தொகையை செலுத்திவிட்டு பயன்படுத்த வேண்டும் என்பது தான் நியாயம். கோடிகளைக் கொட்டி கோடிகளை அள்ள நினைக்கும் இன்றைய பிரம்மாண்டமான சினிமா வியாபாரத்தில் பணம் கொடுக்காமல் அறிவுத்திருட்டு நடத்துவது துளியும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இளையராஜா நடத்தும் போராட்டம் அவருக்கானது மட்டுமல்ல; வலுவான சட்ட முன்னுதாரணத்தை வகுத்துக் கொடுத்து தனக்குப் பின்வரும் எளிய இசையமைப்பாளர்களின் உரிமையை நிலைநாட்டவும் சேர்த்தே தான் போராடுகிறார்.

அவர் எத்தனையோ புதிய புதிய இயக்குநர்களுக்கு பணமே வாங்காமல் இசையமைத்துக் கொடுத்து அந்தப் படங்களும், பாடல்களும் பெருவெற்றி பெற்றுள்ளதை அந்த இயக்குநர்களே வாக்குமூலமாக அளித்துள்ளனர். அப்படிப்பட்ட இசையமைப்பாளரை பணத்தாசையால் செயல்படுகிறார் என்று சொன்னால், அது சொல்பவர்களின் அறியாமையைத் தான் வெளிப்படுத்தும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in