

கடந்த 2024-ம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நால்வர் கொலை செய்ததாக பதிவான வழக்கில் அந்த 4 மாணவர்கள் தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் வழக்கை கையாண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்வைத்துள்ள சில பரிந்துரைகள், ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியை வெளிப்படுத்தும் குரலாகவே அமைந்துள்ளது.
மாநிலத்தின் குற்றப்பதிவு பிரிவு வெளிப்படுத்தும் அறிக்கைகளின்படி பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள் அரங்கேற்றிய தீவிரமான குற்றங்கள் மட்டுமே 231 வழக்குகளாக பதிவாகி உள்ளன. இதில் 58 வழக்குகள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மட்டுமே தொடர்புடையவை. 28 வழக்குகள் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீதானவை.
கணிதமேதை சீனிவாச ராமனுஜனையும், முன்னாள் முதல்வர் அண்ணாவையும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமனையும், ஏராளமான நீதிபதிகளையும் தேசத்துக்கு உருவாக்கிக் கொடுத்த இந்தக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் இறங்குவதை கவலைமிக்க வார்த்தைகளில் நீதிபதி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த மாணவர்களில் பெரும்பாலோர் வறிய குடும்பச்சூழலில் இருந்து வந்தவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரின் கண்காணிப்பில் மட்டுமே மிகுந்த சிரமத்துக்கிடையே வளர்க்கப்பட்டவர்கள் என்பதையும் நீதிபதி குறிப்பிடுகிறார். இதை தனியொரு குற்றமாக பார்க்காமல், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் எதிர்காலத்தை பற்றி அக்கறையோடு சிந்திக்க வேண்டிய முக்கியமான தருணம் இது என்பதும் நீதிபதியின் கருத்து.
மனநல நிபுணர்கள், கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகள் இடம்பெறக் கூடிய ஒரு குழுவை அமைத்து மாணவர்களின் வன்முறை மனோபாவத்தை மாற்றி அமைப்பதற்கான வழிமுறைகளை கல்லூரிகள் வகுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ள கருத்து நிராகரிக்கவே முடியாத ஒன்று.
மாணவர்களின் அதிவேகமான குணக்கேட்டுக்கு முக்கியமான காரணிகள் என்றால் போதை கலாச்சாரத்தையும், வன்முறை கக்கும் கதாநாயக சினிமாக்களையும், தவறான காட்சிகளையும் கருத்துகளையும் விதவிதமாக அள்ளித்தரும் அலைபேசி ஊடகத்தையும்தான் திரும்பத் திரும்ப குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது. கல்வி நிறுவனத்துக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டாலே கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோரும் இன்னொரு காரணம்.
மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்திலோ, சாதிரீதியான ஒடுக்குதலுக்கு எதிராக தெளிவான கருத்துகள் கொண்டிருக்க வேண்டும் என்பதிலோ மாறுபட்ட எண்ணம் இல்லை. ஆனால், கருத்தை கருத்தால் எதிர்ப்பதற்கு பதிலாக கத்தி ஏந்தி ரத்தம் சிந்தும் கொடிய நிலைக்கு அவர்கள் போய்விடவே கூடாது.
இதுவும்போக, நீதிபதி சொல்வதுபோல, பல்தரப்பு நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து மாணவர்கள் மத்தியில் அகிம்சையும், அன்பும் கொடிகட்டிப் பறக்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும். காந்தி தேசத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மறந்துவிட்டால், பிறகு நம்மை காப்பாற்ற யாராலும் முடியாது!