

எனது பள்ளிக் காலத் தமிழ் ஆசிரியர் யாரெனக் கேட்டால், எனது உடனடி பதில் எழுத்தாளர் வாண்டுமாமா என்பதாகவே இருக்கும். வாண்டுமாமா பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர், அவர் எந்தப் பள்ளியில் கற்றுத் தந்தார்? எந்தப் பள்ளியிலும் அவர் ஆசிரியராக பணிபுரிந்திருக்கவில்லை. ஆனால் ‘பூந்தளிர்’, ‘கோகுலம்’, தன் சிறார் நூல்கள் வழியாக ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறாருக்கு அவர் ஆசிரியராக இருந்திருக்கிறார் என உறுதிபடக் கூற முடியும்.
தமிழ்ச் சிறார் எழுத்துக்கு வலுவான அடித்தளத்தை அழ.வள்ளியப்பா, பெரியசாமித் தூரன், ஆர்.வி. போன்றவர்கள் இட்டிருந்தார்கள். அடுத்த கட்டமாக அதைப் பெரிய அளவில் வளர்த்தவர்களில் முதன்மையானவர் வாண்டுமாமா. 1990கள், 2000 வரையிலான தமிழ்ச் சிறார் எழுத்தாளர்கள் இலக்கணப் பிழையின்றி, எளிய தமிழில், சுவாரசியமாக எழுதும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தார்கள். அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா போன்றோரை தொடர்ச்சியாக வாசித்த ஒருவர் தமிழில் சரளமாக வாசிக்கும், எழுதும் திறனை எளிதாக வளர்த்துக்கொண்டுவிடலாம்.