

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஆஸ்ட்விச் வதை முகாமில் அடைத்துவைக்கப்பட்ட யூதர்கள், உயிர்வாழ்வதற்கான நம்பிக்கை வேண்டி நாவல் வாசித்தார்கள். ரகசியமாக ஒன்றுகூடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒருவர் நாவலைப் படிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாவல் முடியும் வரை தாங்கள் உயிரோடு இருப்போம் என்று நம்பினார்கள்; அப்படியே நடந்துமிருக்கிறது. உயிர்காக்கும் மருந்தைப் போல நாவல் செயல்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் இருநூறு வருஷங்களுக்கு முன்பு நாவல் என்பதை வாழ்க்கை வரலாறு என்றே கருதினார்கள். ஆகவே நாவலின் தலைப்பில் நாயகன் அல்லது நாயகியின் பெயர் இடம்பெறுவது வழக்கம். அத்தோடு ‘அவரது வாழ்க்கையும் சாகசங்களும்’ என்ற ரீதியில் தலைப்பிட்டிருப்பார்கள். உண்மையான மனிதர்கள்தான் நாவலின் கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கிறார்கள் என்று வாசகர்கள் நம்பினார்கள். ஆகவே தனக்கு விருப்பமான நாவலின் நாயகன் அல்லது நாயகியின் வீட்டு முகவரி கேட்டுஎழுத்தாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். அயர்லாந்தில் ஒரு நிலப்பிரபு, நாவலின் கதாநாயகனுக்குத் தனது சொத்தை எழுதி வைத்துவிட்டார் என்கிறார்கள்.