

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கரை ஒதுங்கி இருக்கிறது. இதைப் பார்த்த அந்தப் பகுதிமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, போலீஸார் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி என்பது தெரியவந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்தபிளஸ் 2 தேர்வுகளை அந்த மாணவி சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. அதனால் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொள்ளும் தவறான முடிவை எடுத்துள்ளார்.
இதேபோல, நீட் தேர்வு பயத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதாக கவலையளிக்கும் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. மாணவ, மாணவிகளின் உயிர்களை பலி வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. தற்போது பிளஸ் 2 மாணவி தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்காக, பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவது எப்படி சரியாகும்?
தேர்வு பயத்தால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் தவறான முடிவை எடுப்பதைத் தடுக்க அவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். ஒருவேளை, இந்த பிளஸ் 2 மாணவி தேர்வு முடிவுகள் வெளியாகும்போது தேர்வில் வெற்றிபெற்று கூட இருக்கலாம். ஆனால், போன உயிர் திரும்ப வருமா? தேர்வுக்கு சரியாக தயார்படுத்திக் கொண்டு உரியமுறையில் தேர்வுகளை நம்பிக்கையுடன் எழுதி வெற்றிவாகை சூடி வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன்பட வேண்டிய மாணவர்கள் தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்து கொள்வது வேதனையளிக்கிறது.
மாணவர்களுக்கு பள்ளிகளில் வழக்கமான பாடங்களோடுகூட, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் எந்த சூழலிலும் எந்த நெருக்கடியையும் சந்தித்து வெற்றிபெறவும் தேவையான பாடங்களையும் போதிக்கலாம். இது அவர்களுக்கு மனோரீதியான வலிமையைக் கொடுக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்படவேண்டும். நாம் உருவாக்கப் போகின்ற மாற்றங்களின் பயன், நமது மாணவச் செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, புதுமைக்கான மையங்களாக கல்வி நிறுவனங்கள் உருவாகி, அதன் பலன் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம். அப்படி தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டால், தேர்வு பயத்தால், தோல்வியால் தற்கொலை என்ற அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!