

இயற்கை வேளாண்மை குறித்து தமிழ்நாட்டில் பரவலாகப் பேச்சு இருக்கிறது. வேதிக் கலப்பற்ற காய்கறிகளை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். என்றாலும் விளைபொருள்களின் விலை, விநியோகம் போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. சமீபத்தில் நான் நெதர்லாந்துக்குச் சென்றிருந்தபோது, நஞ்சில்லாத காய்கறி உற்பத்தி / நுகர்வு முறையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அவை, நம்மூருக்கும் பொருத்தமானவைதான்.
கல்லூரித் தோழிகளின் முன்னெடுப்பு: அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நஞ்சில்லாத காய்கறிகளை வாங்கச் சிறந்த வழியாக இருப்பது ‘சமூகம் ஆதரிக்கும் வேளாண்மை’ (Community Supported Agriculture). இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்பவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சொந்த / குத்தகை நிலத்தில் காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்கிறார்கள்; வீடுகளுக்குச் சென்றோ அல்லது மையமான இடங்களுக்குக் கொண்டுசென்றோ அவற்றை விநியோகிக்கிறார்கள். இதற்கு வேளாண் பருவம் தொடங்கும் முன்னரே நுகர்வோர் பணம் செலுத்தி உறுப்பினராகிவிட வேண்டும். நெதர்லாந்தில் இது சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.