

தமிழ்நாட்டு அரசியலில் மொழியின் தாக்கம் அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்தாலும் அம்பேத்கரின் மொழி குறித்த பார்வை இங்கு விவாதிக்கப்படுவதில்லை. ஒன்பது மொழிகளைக் கற்றறிந்ததோடு, பாலி மொழிக்கு இலக்கணமும் வகுத்தவர் அம்பேத்கர். மொழி குறித்த அவரது பார்வை, பெரும்பாலும் எதிர்மறையாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ‘இந்தியைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்’, ‘மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தார்’, ‘தேசிய இனங்களை அங்கீகரிக்கவில்லை’ என்றெல்லாம் அம்பேத்கர் மீது விமர்சனங்கள் உண்டு.
ஆனால், இந்தியாவை ஓர் ஒன்றுபட்ட, வலிமைமிக்க, வளமான நாடாக மாற்ற வேண்டும் என்கிற உன்னதமான லட்சியத்துக்காக அம்மக்களை ‘இந்தியர்’களாக்க வேண்டும்; அவர்களிடம் முதலும் இறுதியுமாக ‘இந்தியர்’ என்கிற உணர்வே மேலோங்கி நிற்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் உயரிய குறிக்கோளுக்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். அம்பேத்கர் முன்வைத்த தேசியம், தேசிய விலங்கையோ, பறவையையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் அன்பைப் பரிமாறிக்கொள்வதுடன் - சக மனிதரைத் தான் என உணரும் (a longing to belong) - வேட்கையைத் தன்னகத்தே கொண்டது.