

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி பொது நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவத்தை குறிப்பிட்டு, அதனுடன் விலைமாதுவை தொடர்புபடுத்தி கற்பனைக் கதை ஒன்றைப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சைவம், வைணவம் ஆகிய இரண்டும் இந்து மதத்தின் அங்கமாக உள்ள சமய வழிபாட்டு முறைகளாகும். இதில் நம்பிக்கை கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நமது நாட்டில், அவர்களது நம்பிக்கையை கேலி செய்யும் வகையில்
பேசுவது அப்பட்டமான, அநாகரிகமான செயல். அதுவும் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஒருவர் இத்தகைய தரமற்ற வார்த்தைகளை பொது மேடையில் உச்சரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. கடவுள் மறுப்பு என்பது ஒரு சித்தாந்தம். அதை திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த திமுக-வினர் பின்பற்றுவது அவர்களது உரிமை. ஆனால், மாற்றுக் கருத்து கொண்டவர்களை புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை திமுக-வினர் உணர வேண்டும்.
ஆரம்பகாலத்தில் இருந்தே பொதுக்கூட்டங்களில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதில் வல்லமை கொண்ட பேச்சாளர்கள் திமுக-வில் இருந்தனர் என்பதை நாடறியும். மறைந்த முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, ‘சிலேடை மொழியில்’ அரசியல் எதிரிகளை விமர்சிப்பார். சர்ச்சைகள் இருந்தால் சாமர்த்தியமாக சமாளிப்பார். பொதுமேடை என்று வரும்போது இலைமறை காயாக, மறைமுகமாக விமர்சிப்பாரே தவிர, நா கூசும் வார்த்தைகளை கவனத்தோடு தவிர்ப்பார். அவரிடம் நெருங்கிப் பழகிய, பயிற்சி பெற்ற மூத்த அமைச்சர்கள் பட்டியலில் உள்ள பொன்முடி போன்றவர்கள் இதுபோன்று பேசுவது அவர்கள் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல; சார்ந்துள்ள இயக்கத்திற்கும் எந்தவகையிலும் பயனளிக்காது. வாய் தவறி உளறிவிட்டார் என்று வக்காலத்து வாங்குவதையும் ஏற்க முடியாது. என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்தே, வேண்டுமென்றே பேசும் பழக்கம் உடையவர் தான் அமைச்சர் பொன்முடி என்பதற்கு கடந்த காலங்களில் அவர் உதிர்த்த நோகடிக்கும் வார்த்தைகளே சாட்சி.
பொன்முடி உதிர்த்திருப்பது ஆபாசத்தின் உச்சமான வார்த்தைகள் என்பது மட்டுமல்ல, உச்சகட்ட மத துவேஷம் கொண்ட அருவெறுப்பான தாக்குதலும்கூட என்பதால் இதை சாதாரணமாக விட்டுவிட முடியாது. முன்பெல்லாம் எங்கோ தெருமுனையில் பொறுப்பின்றி பேசி ஆபாச ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கிக் கொண்டு அப்படியே கிளம்பிப் போய்விட முடியும். ஆனால், இன்று இணையத்தின் அதிவேக வளர்ச்சிகாரணமாக எங்கே யார் என்ன பேசினாலும் அது சந்திக்குவந்து அதற்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டுமென்ற நிலை உருவாகியுள்ளது.
அப்படியிருந்தும் பொன்முடி போன்றவர்கள் மத நம்பிக்கைகளையும் மத உணர்வுகளையும் ஒருசார்பாக கொச்சைப்படுத்தி தொடர்ந்து எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. துணைப்பொதுச்செயலாளர் பதவிநீக்கம் என்பது மட்டும் அவருக்கு போதுமான தண்டனை ஆகாது. குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களின் உணர்வைப் புண்படுத்திய வகையில், அரசுப் பொறுப்பான அமைச்சர் பதவியை வகிக்கவும் அவர் தகுதியிழக்கிறார் என்பதை உணர்ந்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.