

நாவல் என்பது உண்மையின் மாற்று வடிவம்; அது ஒரு விசித்திரமான நெசவு. நாவலில் நிஜமும் நினைவும் ஒன்று சேர்ந்து நெய்யப்படுகின்றன. காலத்தில் உறைந்தும் மறந்தும் போன நினைவுகளை நாவல் உயிர்பெறச் செய்கிறது. நாவல் இல்லாமல் போயிருந்தால் சரித்திரம் இவ்வளவு துடிப்புடன் உயிர்பெற்றிருக்காது.
நாவலின் மகத்தான கதாபாத்திரங்களை நாவல்வாசிகள் என்றே நாம் அழைக்கலாம். நாவலில் வரும் சில கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவர்களாக நம் மனதில் தங்கிவிடுகிறார்கள். தி.ஜானகிராமனின் வாசகர்களுக்கு ‘மோகமுள்’ளில் வரும் பாபுவும் ஜமுனாவும் வெறும் கதாபாத்திரங்கள்தானா என்ன? ‘மரப்பசு’ நாவலில் அம்மிணியை, ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவலின் ‘ஹென்றி’யை, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலின் பிலோமியை யாரால் மறக்க முடியும்? தலைமுறை கடந்து சென்றாலும் அவர்கள் என்றும் இளமையாக நாவலில் வாழ்கிறார்கள். எழுத்தில் பிறந்து எழுத்தில் வாழ்கிறவர்களுக்கு ஒரு போதும் மரணமில்லை.