

ஒரு நபரின் தற்கொலை வழக்கு, ஆதாரமின்றி அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்களது வாழ்க்கையையே நிலைகுலையச் செய்வது உண்டு. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு அவரது காதலி ரியா சக்கரவர்த்தியையும் அவரது குடும்பத்தினரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவர்களை அலைக்கழித்ததுடன், சந்தேகம் என்கிற பெயரில் சம்பந்தமில்லாத பலரையும் வாட்டி எடுத்துவிட்டது.
இவ்வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கை, ‘சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் இல்லை’ என்னும் தகவலுடன் வெளியாகியிருப்பது இந்தச் சர்ச்சைகளுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஆனால், இந்த வழக்கு நடந்த காலம் முழுவதும் ஊடகங்கள் - அதுவும் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் ஊடக தர்மம் குறித்து வலுவான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.