

துபாய் தொழிலதிபர் யூசுப் அலியுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, தமிழகத்தில் லூலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு கதவுகள் திறந்து விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செனாய் நகர், சென்ட்ரல், விம்கோ நகர் டிப்போ ரயில் நிலையங்களில் லூலு மார்க்கெட் கிளைகளை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பு, உள்ளூர் வணிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செனாய் நகர் ரயில் நிலையத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் 600 இருக்கைகள் கொண்ட சினிபிளக்ஸ் வசதியுடன் வணிக வளாகம் அமையவுள்ளது. அதேபோல், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 40 ஆயிரம் சதுர அடியிலும், விம்கோ நகர் டிப்போ ரயில் நிலையத்தில் 60 ஆயிரம் சதுர அடி வளாகத்திலும் வணிக வளாகம் அமையவிருக்கிறது.
நகர மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதியாக இதுபோன்ற அதிநவீன வணிக வளாகங்கள் அமைவது தவிர்க்க முடியாததுதான். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பறைசாற்றும் அடையாளமாகவும் இதுபோன்ற வணிக வளாகங்கள் அமைவது இயற்கையானதே.
இத்தகைய வணிக வளாகங்கள் உயர் வருவாய் மற்றும் உயர் நடுத்தர வருவாய் பிரிவினரின் தேவைகளை பூர்த்தி செய்பவையாக இருந்தாலும், இதுபோன்ற பிரம்மாண்டமான வணிக வளாகங்களின் வருகையால் உள்ளூர் பலசரக்கு உள்ளிட்ட சிறு பொருட்களை விற்பனை செய்யும் சாதாரண வணிகர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், இதுபோன்ற வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று வணிகர்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது லூலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கவும் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. ஒருபுறம் நவீன வர்த்தக வளர்ச்சி மற்றும் அந்நிய முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவித்தாலும், உள்ளூர் வணிகர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் அரசுக்கு உண்டு.
உலக மயமாக்கல் திட்டத்தின்கீழ் வர்த்தகத்தை திறந்து விடுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போதுகூட, உள்ளூர் தொழில்கள் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க மற்ற நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கலாம் என்ற உத்தரவாதத்தை பெற்ற பிறகே நாடுகள் கையெழுத்திட்டன. அந்த நடைமுறை மாநில அளவிலும் பின்பற்றப்பட வேண்டும். உலக அளவில் வர்த்தகம் செய்யும் பெருநிறுவனங்கள் பணபலம், தொழில்நுட்ப பலம், அரசு அமைப்புகளின் ஆதரவுடன் களமிறங்கும்போது அவர்களுடன் சாதாரண உள்ளூர் வணிகர்களால் போட்டி போட முடியாது. இருதரப்பினரையும் ஒரு மாதிரியான கண்ணோட்டத்துடன் அணுகுவது நியாயமற்றது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உள்ளூர் வணிகர்களை பாதுகாக்க தேவையான அம்சங்களை உள்ளடக்கி அனுமதி அளிப்பது அரசின் கடமை. பெருநிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பது, உள்ளூர் வணிகர்களுக்கு வரிச்சலுகை வழங்குவது உள்ளிட்ட அணுகுமுறைகள் மட்டுமின்றி, உள்ளூர் வணிகர்களுக்குள் குழு உருவாக்கவும், விநியோக கட்டமைப்பை உருவாக்கவும், அதற்கான தொழில்நுட்பத்தையும் வழங்கி அவர்களை தாங்கிப் பிடிப்பதும் அவசியம்.