இசைக்கருவிகளில் தலையாய பறை
தமிழ்நாட்டுக் கோயில்களில் சோழர் காலத்தில் பணியிலிருந்த கருவியிசைக் கலைஞர்கள், ‘உவச்சர்’ என்ற பொதுச்சொல்லால் அழைக்கப்பட்டனர். ராஜகேசரிவர்மரின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட திருச்செங்கோடு செப்பேடு பஞ்சமாசப்தம் கொட்டும் உவச்சர்க்கு நிலமளிக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்தப் பஞ்சமாசப்தம் எனும் தொடர் தோல், காற்று, நரம்பு, கஞ்சக்கருவிகளின் ஒலியுடன் குரலொலியும் இணைந்த ஐந்தொலிக்கூட்டைக் குறிப்பதாக அகராதிகள் பொருள் தருகின்றன. இத்தகு ஐந்தொலிக்கூட்டு மிகக் சில கோயில்களிலேயே வழக்கிலிருந்தது.
சோழர் காலத்தில் பதிவாகியுள்ள இசைக்கல்வெட்டுகளை ஆராய்கையில் இறைவழிபாட்டில் தோல், காற்று, கஞ்சக்கருவிகளே பெருவழக்காக இயக்கப்பட்டமை அறியமுடிகிறது. தோல்கருவிகளுள் மத்தளம் முதல்நிலை பெறத் திமிலை, கறடிகை ஆகிய இரண்டும் பல கோயில்களில் பயன்பாட்டில் இருந்தன. செண்டை கோனேரிராசபுரம் உமாமகேசுவரர் கோயிலில் இசைக்கப்பட்டது. மண்டை எனும் தோல்கருவி திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் கொட்டப்பட்டது. இத்தோல்கருவிகளுள் அதிக எண்ணிக்கையில் அமைந்த பெருமையை மத்தளமே பெறுகிறது. சில கோயில்களில் மூவராக இருந்த மத்தளக் கலைஞர்கள் விழாக்காலங்களில் எண்ணிக்கையில் கூடிப் பலராக அமைந்ததை முதல் ராஜேந்திரர் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.
