

தலை முதல் கால் பாதம் வரை... இது விளம்பர யுகம். எந்தவொரு தொழிலை நடத்துவோரும் வருடாந்திர விளம்பரச் செலவுக்கென்று கணிசமான தொகையை வைத்து, அந்த செலவை தாங்கள் விற்கும் பொருளின் விலையில் சேர்ப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு வியாபார அம்சமாகி விட்ட காலம் இது!
அந்த விளம்பரங்களில் உண்மைத்தன்மையும், நேர்மையான அணுகுமுறையும் உள்ளவரையில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், பொருட்களையும் சேவைகளையும் சிபாரிசு செய்வதற்காக பிரபலங்களை பயன்படுத்தும் போதுதான் பல கேள்விகள் எழுகின்றன. தாங்கள் ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றி தூக்கி வைத்துப்பேசும் பொருள் அல்லது சேவையின் தரம் குறித்து எந்த அளவுக்கு இந்த பிரபலங்கள் உத்தரவாதம் தர முடியும்?
அப்படித்தான் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட 25 பேர் மீது தெலங்கானா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், திறன் சார்ந்த விளையாட்டு மற்றும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில்தான் விளையாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்று சில நட்சத்திரங்களின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட செயலிகள் தனி மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சிதைத்துக் கொண்டே வருவதை அன்றாடம் செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், எதுவுமே தெரியாதது போல, இந்த சூதாட்ட செயலியை பிரபலங்கள் விளம்பரம் செய்வது எத்தனை பெரிய வேதனை. தாங்கள் புகழுடனும் செல்வத்துடன் இருப்பதற்கு காரணமான சாதாரண மனிதனை, எந்தவித தரவுகளும் இன்றி ஒரு பொருளையோ, சேவையையோ பயன்படுத்த கவர்ந்து இழுக்கிறோமே, இது தர்மம்தானா என்ற குற்ற உணர்வு சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் தோன்றும் பிரபலங்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
இப்போது தெலங்கானாவில் 25 நடிகர், நடிகைகள் மீது பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு விசாரணையை தொடங்க வேண்டும். அதில். மத்திய அரசையும் ஒரு அங்கமாக அழைக்க வேண்டும். விளம்பரத்தில் அளிக்கின்ற உத்தரவாதங்கள் பொய்த்து, பாதிக்கப்பட்ட நுகர்வோர் வழக்கு போடும் பட்சத்தில், நீதிமன்றம் அளிக்கும் அபராதம் மற்றும்தண்டனையில் விளம்பர தூதருக்கும் பங்கு உண்டு என்பதை சட்டமாகவே கொண்டு வர வேண்டும்!
விளம்பரம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்த ‘பொறுப்பு ஏற்பு’ நிபந்தனையை ஒப்புக் கொள்வதாக பிரபலங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்! அப்போதுதான், மக்களை சுரண்டும் நோக்கமற்ற, தரமான பொருள் அல்லது சேவைக்கான விளம்பரத்தில் மட்டுமே தோன்ற வேண்டும் என்ற பொறுப்பு பிரபலங்களுக்கும் வரும். அல்லது, விளம்பரத்தின் உண்மை, நம்பகத்தன்மைக்கு இதில் தோன்றுபவர் பொறுப்பல்ல என்று ‘பொறுப்பு துறப்பு’ வாசகங்களை ஒவ்வொரு விளம்பரத்திலும் சேர்க்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்த வேண்டும்! அப்படி செய்தால் ‘பாலுக்கும் கள்ளுக்கும்’ உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து நுகர்வோரும் ஒரு முடிவுக்கு வருவார்கள். நடக்குமா இதெல்லாம்?