

நீர் இருப்பு பற்றி வெளிவரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. ஒருபுறம், எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய நீர் வளங்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன. மறுபுறம் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது. உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல் ஆண்டுதோறும் 1% முதல் 2% வரை அதிகரித்துவருவதால் நிலத்தடி நீர் இருப்பும் குறைந்துவருகிறது. குளங்கள், ஏரிகள் ஆபத்தான வேகத்தில் மறைந்துவருகின்றன. நிலைமை இப்படியே சென்றால் எதிர்காலச் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்குமா?
பிரச்சினையின் தீவிரம்: உலக வங்கி, யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள், இன்று உலகளவில் நீர்ப் பற்றாக்குறை மிகவும் பெரிய சவாலாகவும், கோடிக்கணக்கான மக்களைத் தினமும் பாதித்துவருவதாகவும் கூறுகின்றன. மக்கள்தொகை அதிகரித்து நகரங்கள் தொடர்ந்து விரிவடைவதால், தண்ணீருக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.