டாஸ்மாக் ‘அரசியல்’ யுத்தம்: முறைசெய்து குடிமக்களை காப்பாற்ற வேண்டும்!

டாஸ்மாக் ‘அரசியல்’ யுத்தம்: முறைசெய்து குடிமக்களை காப்பாற்ற வேண்டும்!
Updated on
1 min read

மதுக்கடையை மையமாக வைத்து தமிழ்நாட்டுக்குள் அடுத்ததாக ஓர் அரசியல் யுத்தம் தொடங்கியிருக்கிறது. ஒருபக்கம் அரசாங்கத்தின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்த, அதை வைத்து தீப்பொறி பறக்க அறிக்கைகள் விட ஆரம்பித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆளும் திமுக அரசை நோக்கிய அவரது குற்றச்சாட்டுகளை, கடுமையான பதில் குற்றச்சாட்டுகளால் துளைக்கத் தொடங்கியது எதிர்தரப்பு.

போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று தமிழக இளைஞர்களை வேண்டிக் கேட்டுக்கொண்ட முதல்வரின் விளம்பரத்தையே போராட்ட ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியது பாஜக. அக்கட்சியின் மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று முதல்வரின் படத்தை அங்கெல்லாம் ஒட்டி, முதல்வர் சொன்ன வாசகத்தையும் அதில் வைத்து ஏகடிய வியூகம் வகுக்கத் தொடங்கியதில் மிகவும் கொதித்துப் போனது திமுக தரப்பு.

பதிலுக்கு அண்ணாமலை தனக்குத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் படத்தை ஆங்காங்கே ஒட்டி அவரை நையாண்டி செய்யும் வேலையில் இறங்கினார்கள். இதுபோன்ற ‘அடி - பதிலடி’ வகை போராட்டங்களுக்கு நடுவில் மக்கள் சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகிறதோ என்ற கவலை எழுகிறது.

தமிழகத்தில்தான் என்றில்லை... மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எச்சரிக்கை வாசகம் தாங்கியபடி வெகுஜோராக பல மாநில அரசுகள் மது விற்பனை செய்கின்றன; புகையிலை புற்றுநோயை உருவாக்கும், உயிரைக் கொல்லும் என்று மிரட்டிக் கொண்டே பீடி, சிகரெட் விற்பனை தங்குதடையின்றி அரங்கேறுகிறது; இந்த விளையாட்டில் உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம், பொறுப்போடு விளையாடுங்கள் என்று கடமைக்கு ஒரு முன்னெச்சரிக்கை தந்துவிட்டு ஆன்லைன் சூதாட்டங்களை நாடெங்கும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடையின் எண்ணிக்கையை குறைப்போம் என்று சொன்னவர்கள், பண்டிகை நாட்களில் மது விற்பனை மூலம் வருவாய் கூடியிருப்பதை அறிக்கை விட்டு பூரிக்கிறார்கள். புகையிலை விற்பனை செய்யும் பிரம்மாண்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று மொத்தமாக அவர்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.

ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்களை தடைசெய்ய எளிதான வழிகள் இருந்தும்கூட, அதைச்செய்யாமல்... இதன் மூலம் அநியாயமாக பணத்தை இழந்துகடனாளியானவர்கள் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்துகொள்வதை வெறுமனே வேடிக்கை பார்ப்பதோடு தங்கள் பொறுப்பை கழித்துக் கொள்கிறார்கள். இதில் மாநில அரசென்ன... மத்திய அரசென்ன!

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். தங்கள் குடிமக்கள் பாதிக்கப்படாமல் முறைசெய்து காப்பாற்றும்போதுதான் நாடாளும் மன்னவன் அந்த மக்களைக்காக்கும் தெய்வமாக மதிக்கப்படுவான் என்றார் வள்ளுவர். அவரை உரிமைக் கொண்டாடுவதில் காட்டும் அதே ஆர்வத்தை, அவர் கூறிய அறிவுரையை நிறைவேற்றுவதில் காட்டட்டும் மத்திய - மாநில அரசுகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in