Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM

மூளையைப் பற்றி 3 கட்டுக்கதைகள்

நரம்பியல்-உடற்செயலியல் நிபுணரான பியரி பிளாரென்ஸ் என்ற பிரெஞ்சுக்காரர் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூளையின் செயல்களை அறிய புதுவகை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். புறா, கோழி, தவளை போன்ற உயிரிகளின் மூளையிலிருந்து பெருமளவு திசுக்களை அகற்றி, அவற்றின் செயல்களைக் கூர்ந்து ஆராய்ந்தார். மூளையின் முன் பகுதி, பின் பகுதி, மேல் பகுதி அல்லது பக்கவாட்டுப் பகுதியிலிருந்து சிறிதளவு திசுக்களை அகற்றினாலும் அவற்றின் செயல்களில் மாற்றம் அதிகமில்லை, செயல்பாட்டுக்கு அதன் மூளை மடலில் சிறு பகுதியே போதும் என்று குறிப்பெழுதினார். அதிலிருந்துதான் நாம் நம்முடைய மூளையின் 10% பகுதியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்ற கட்டுக்கதை உலவத் தொடங்கியது.

சார்லஸ் எட்வர்ட் பிரௌன் செக்வார்ட் என்ற அறிவியல் அறிஞரும் 1876-ல் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். ஒரு சிலர் மட்டுமே மூளையை முழுதாகப் பயன்படுத்துகின்றனர், பெரும் பாலானவர்கள் மூளையின் பெரும் பகுதியைப் பயன்படுத்துவதே இல்லை என்றுகூட எழுதிவிட்டார்.

பியரி பிளாரென்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியை மிகவும் கொடூரமாகவே நடத்தியிருக்கிறார். அதை விடப் பரிதாபம், சில பிராணிகளின் மூளையை வெட்டி ஆராய்ச்சி செய்துவிட்டு அப்படித்தான் மனிதர்களுக்கும் இருக்கும் என்ற அனுமானத்துக்கு வந்துவிட்டார். இப்போது மூளை நரம்பியல் நிபுணர்களும் பிற அறிஞர்களும் இந்தக் கட்டுக் கதைகளை அடியோடு மறுக்கின்றனர்.

இரண்டாவது கட்டுக்கதை

அதே போல மற்றொரு கட்டுக்கதை மூளையின் வலது, இடது பகுதிகள் வெவ்வேறு செயல்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்பது. இடது மூளை தர்க்கரீதியாக ஆராய்வதாகவும் எதையும் விரிவாக ஆராய்வதாகவும் வலது பகுதி கற்பனைவளம் ஊற்றெடுக்கக் காரணமாக இருப்பதாகவும் கருதி

வருகின்றனர். 1860-ல் ஒருவருடைய மூளையை ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகக் கூறப்படும் முடிவுகளிலிருந்து இந்த கட்டுக்கதை உருவானது. மூளையின் இடதுபுறத்தில் காயம் பட்டால் ஒருவருடைய மொழியாற்றலில் பாதிப்பு நேரும் என்று அப்போதிலிருந்து கருதப்படுகிறது. மூளையின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளில் ஒட்டுமொத்தமான செயல்திறனில் ஓரளவுக்குப் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என்றாலும், குறிப்பாக இடதுபுறம் முழுக்க இந்தச் செயல்களுக்குப் பொறுப்பு, வலதுபுறம் முழுக்க இந்த வேலைகளைச் செய்கிறது என்பது சரியல்ல. எல்லா செயல்களிலும் மூளையின் இரு பகுதி களும் இணைந்தே செயல்புரிகின்றன.

பிரதிசெயல் நியூரான்கள்

சமீபகாலமாக மூளை நியூரான்கள் குறித்துப் புதிய கட்டுக்கதைகள் உலவத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பிரதிசெயல் நியூரான்கள் என்று அழைக்கின்றனர். ஒரு குரங்கு வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுவதைப் பார்த்து, இன்னொரு குரங்கு அதைச் செய்கிறது. இதற்குக் காரணம், பிரதிசெயல் நியூரான்கள் என்கின்றனர். முதல் குரங்கின் செயலை இரண்டாவது குரங்கு தன்னுடைய மூளையில் ஒருமுறை ஒத்திகை பார்ப்ப

தால் இது நடக்கிறது என்கின்றனர். மனிதர்களிடமும் இத்தகைய குணாதிசயங்கள் இருப்பதால் சிறப்பாக சில துறைகளில் அது பிரதிபலிக்கிறது என்கின்றனர். ஒருவர் பேசுவதைப் போல மற்றொருவர் பேசுவது, ஒருவரைப் போலவே இன்னொருவர் செய்துகாட்டுவது, ஒருவருக்கு நேரிடும் துயரத்துக்கு வருத்தம் தெரிவிப்பது போன்றவற்றுக்குப் பிரதிசெயல் நியூரான்களே காரணம் என்கின்றனர். இந்தத் திறன் குறைந்த வர்களை மூளை பாதிப்புக்குள்ளானோர் என்று வகைப்படுத்துகின்றனர். பிற குழந்தைகளைப் போலப் பேசுவது, படிப்பது, புரிந்து கொள்வது ஆகியவற்றில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பிரதிசெயல் நியூரான்கள் செயல்பாடு குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். நம்மால் செய்ய முடிந்ததை, அனுபவிக்க முடிந்ததை மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்கின்றனர்.

சில மாணவர்கள் கும்பலாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் தன்னுடைய சாப்பாட்டில் கரப்பான்பூச்சி இருப்பதாகக் கூறினால், அதைப் பார்க்காவிட்டாலும் கேட்ட மாத்திரத்தில் சிலருக்குக் குமட்டல் ஏற்படுகிறது. இதற்குக் காரணம், பிரதிசெயல் நியூரான்கள்தான் என்கின்றனர். பிரதிசெயல் நியூரான்கள் இல்லாததால் இந்தக் கோளாறு ஏற்படவில்லை, அதன் இயக்கம் சீராக இல்லாததால்தான் இந்தக் கோளாறு என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். வயது முதிர்ச்சியின்போது மூளையில் ஏற்படும் கோளாறு காரணமாகப் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிரதிசெயல் நியூரான்கள் இல்லாததால் அல்ல, அதன் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுதான். எனவே, மூன்றாவது கட்டுக்கதையும் தகர்கிறது.

-தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x