

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்க அதிபர் பிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து உக்ரைன் மீதான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்க புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
உலகத்தின் எதிரெதிர் துருவங்களான இரு நாடுகளின் அதிபர்களும் தொலைபேசியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசும் அளவுக்கு காலம் இன்று மாறியுள்ளது. இனி ஒரு போருக்கு இடமேயில்லை செலவிட சக்தியுமில்லை என்று பேசப்படும் நேரத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலும் உலகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்தன.
பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் புரட்சி என்ற பெயரிலும் சில தீவிரவாதிகளும் கொடூரமாக நடத்திவரும் தாக்குதல் களால் ஏற்படும் மனித மற்றும் பொருள் இழப்புகள் பெருத்த சோகத்தை உண்டாக்கி வருகின்றன. இந்நிலையில், பெரும் நாடுகளே போரில் இறங்குவது ஏதோ ஒரு வகையில் உலகின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஏற்கெனவே, மனித இனத்தின் பேராசை காரணமாக வளர்ச்சி என்ற பெயரால் விலைமதிப்பற்ற இயற்கை தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் விதமாக அசுரத்தனமான தொழில் வளர்ச்சியும் கனிமவள வேட்டையும் பூமித்தாயின் அழகிய முகத்தை செதுக்கி சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறை உருகுதல், ஊருக்குள் கடல்புகுதல், ஆங்காங்கே நிலச்சரிவுகள், திணறடிக்கும் நச்சுப் புகையால் நகரங்கள் தவித்தல், எதிர்பாராத மேகவெடிப்புகள் காரணமாக வெள்ளம் புகுதல் என்று இயற்கை தன் பதிலடியை வெவ்வேறு விதமாக காட்டிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.
இன்று பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் ஒருபுறமும் கவுரவ யுத்தம் என்ற பெயரில் இன்னொரு புறமும் நிஜ யுத்தம் மீண்டும் மீண்டும் பூமிப்பந்தை அதிர்வடையச் செய்து கொண்டே இருப்பதை இனியும் அனுமதிக்கலாகாது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரானாலும் சரி, ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடுத்த போரானாலும் சரி, எப்பாடுபட்டாகிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மனித குலத்தின் பேராசையும் பொறாமையும் மதத் துவேஷமும் குருட்டுத்தனமான வளர்ச்சி மனப்பான்மையும் ஒட்டுமொத்தமாக சேரும்போது இந்த பூமி நாம் வாழ்வதற்கு ஏற்றதல்ல என்ற நிலையை என்றாவது ஒருநாள் கொண்டு வந்தே தீரும். இயற்கை கொடுத்த அற்புதமான இந்த கிரகத்தை அடிமுட்டாள்தனமாக நாசம் செய்துகொண்டே, மனித இனம் வாழ்வதற்கு காற்றும் தண்ணீரும் கிடைக்கிறதா என்று நிலவு உட்பட வேற்று கிரகங்களில் போய் தேடுதல் வேட்டை நடத்துவதை என்னவென்று சொல்வது?
எவ்வாறேனும் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்து பூமித்தாய் மகிழும் வண்ணம் உண்மையான புத்திசாலித்தனத்தோடு அன்பும் அமைதியும் சூழ நம் ஆன்றோர்கள் சொல்லிக் கொடுத்த எளிதான ஒரு வாழ்க்கையை வாழப் பழகுவோம். அதை உலகத் தலைவர்களும் உணரும் நாள் உடனே வரட்டும் என்று மனமார வேண்டி நிற்போம். - எஸ்.எஸ்.