

சிம்பொனி இசைக்க லண்டன் சென்ற இசைஞானி இளையராஜா, அதற்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட குறிப்பிட்ட ஒரு கேள்வியும் அது தொடர்பான ஊடகப் பதிவுகளில் காணக் கிடைத்த பின்னூட்டங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன; ஒரு சமூகமாக நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என அச்சம்கொள்ள வைக்கின்றன. மனமும் முகமும் உற்சாகம் ஊற்றெடுக்க நின்ற இளையராஜாவிடம் இடம் பொருள் ஏவல் அறியாத ஓர் ஊடகவியலாளரின் கேள்வி கண்டனத்துக்கு உரியதாகவே இருந்தது.
கண்டனத்தைப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும், இளையராஜாவின் சங்கடத்தையும் தலைப்புச் செய்தியாக வைத்து எண்ணற்ற காணொளிகளைச் சமூக ஊடகங்கள் வெளியிட்டன. பெரும்பாலான தலைப்புகள் எதிர்க்கருத்துகளை விதைப்பதாகவே இருக்கின்றன. அந்தக் காணொளிகளுக்கான பின்னூட்டங்கள் இன்னும் துயரமானவை. சில, நேரடியாக அவதூறு பரப்புகின்றன, வேறு சில “இசைமேதைதான் ஆனால்...” என ‘இக்கு’ வைத்துத் தூற்றுகின்றன.