

மாணவர் ஒருவர் பேசிய பேச்சு வைரலாகிவிட்டது. நேபாளத்தில் உள்ள ஹோலி பெல் பள்ளியில் கடந்த வாரம் ஆண்டு விழா. அங்கு பேசிய மாணவர் பெயர் அபிஸ்கர் ரவுத். ‘‘புதிய நேபாளத்தை உருவாக்க இங்கு பல கனவுகளுடன் உங்கள் முன் நிற்கிறேன். நம்பிக்கை, ஆர்வம் என்ற நெருப்பு எனக்குள் எரிகிறது. ஆனால், என் இதயம் கனக்கிறது. ஏனெனில், அந்த கனவுகள் கைநழுவி போகுமோ என்ற அச்சம்.
இந்த நாட்டில் பிறந்தோம். நம்மை வளர்த்த இந்த நேபாளத் தாய்க்கு என்ன செய்தோம். இந்த தாய் திருப்பி என்ன கேட்கிறது? நேர்மை, கடின உழைப்பு, நமது பங்களிப்பு... அவ்வளவுதான். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். வேலை வாய்ப்பின்மை, அரசியல் கட்சிகளின் சுயநல விளையாட்டு, ஊழல் போன்ற சங்கிலிகளால் கட்டுண்டு கிடக்கிறோம். ஊழல் நமது எதிர்காலத்தின் ஒளியை அணைத்துவிடும் ஒரு வலையைப் பின்னியுள்ளது’’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.
பள்ளி ஆண்டு விழாவில் பேசிய அந்த மாணவரின் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் எல்லாம் முதிர்ச்சியான ஒரு பேச்சாகவே இருக்கிறது. அதற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பும் விமர்சனமும் வழக்கம் போல் இருக்கத்தான் செய்கின்றன. ‘‘சர்வாதிகாரி ஹிட்லரின் பேச்சு போல் இருக்கிறது’’ என்று ஒருவர் கூறியிருக்கிறார். அதற்கு, ‘‘துளி கூட நம்பிக்கை இல்லாதவர்கள்தான் மாணவரை கிண்டல் செய்கின்றனர்’’ என்று மற்றொருவர் கூறியிருக்கிறார்.
மாணவரின் பேச்சில் கவனிக்க வேண்டிய விஷயம் ஊழல்,அரசியல் கட்சிகளின் விளையாட்டு. எதிர் சிந்தனைகள், செயல்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, மக்கள் மனநிலை அதற்கு எதிராகவே இருக்கும். இது அரசியல் கட்சியினருக்கு நன்கு புரியும். அதை நிரூபிப்பது போலதான் கடந்த ஓராண்டாக நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு பிரிவினரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்தபோராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர். அப்படி இருந்தும் மன்னராட்சியே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வருவதற்கு என்ன காரணம்? எப்படி சுற்றிவளைத்து பார்த்தாலும் ஊழல்தான் முதன்மை காரணமாக நிற்கிறது.
ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் விரக்தி அடையும் மக்களின் மனநிலை ஒரு புள்ளியில் குவியும் போது மாற்றங்கள் இயல்பாக நடைபெறும். அதற்கு எந்த நாடும் அல்லது எந்த அரசும் விதிவிலக்கல்ல. ஊழல், வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி. அரசியல் ஸ்திரமற்ற நிலை போன்ற சவால்களை கிட்டதட்ட அனைத்து நாடுகளுமே சந்திக்கின்றன. அதுதான் மாணவர் அபிஸ்கர் பேச்சிலும் எதிரொலித்துள்ளது.
மாணவர்களிடம் இதுபோன்ற ஆழ்ந்த சிந்தனைகள் தொலைநோக்கு பார்வையுடன் உருவாக வேண்டும். அதேநேரத்தில் அந்த சிந்தனையின் வடிகாலை தூய ஜனநாயக வழியில் தேட வேண்டும். அப்படி செய்தால்தான் இந்த சமுதாயம் தொடர்ந்து நேர்வழியில் செல்லும்.