

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்கிற கேஒய்சி (Know Your Customer) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கூடவே இணையவழி மோசடிகளுக்கு அவர்கள் உள்ளாவதும் இன்னொரு பெரும் பிரச்சினையாகி வருகிறது.
கேஒய்சியின் தேவை: வங்கி, காப்பீடு, பரஸ்பர நிதி முதலீடு, பங்குச்சந்தை சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கு ஒருவரது அடையாளம், முகவரி குறித்த சான்றுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அளிப்பதே கேஒய்சி. ஒருவரது கைபேசி எண், முகவரி உள்ளிட்டவை மாற்றப்பட்டாலும், கேஒய்சி புதுப்பித்தல் அவசியம்.