

புற்றுநோய்க்குப் புதிய தடுப்பூசியைக் கண்டு பிடித்துவிட்டதாக 2024 டிசம்பரில் ரஷ்ய அரசு வெளியிட்ட அறிவிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. 2025இல் அந்தத் தடுப்பூசி இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த கதிர்வீச்சு மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (Radiology Medical Research Center) பொது இயக்குநர் ஆண்ட்ரே கேப்ரின் ரஷ்ய வானொலி வாயிலாக இந்தத் தடுப்பூசி குறித்து மக்களிடம் பேசியது மேலும் பரபரப்பைக் கிளப்பியது.
அடுத்ததாக, “எம்.ஆர்.என்.ஏ. (mRNA) வகையைச் சேர்ந்த இந்தப் புதிய புற்றுநோய்த் தடுப்பூசி மனித சோதனைக்கு முந்தைய பரீட்சார்த்த சோதனைகளில் (Pre-clinical trials) புற்றுநோய்க் கட்டிகளை வளர விடாமல் தடுத்தது. உடலின் பிற இடங்களில் புற்றுநோய் பரவுவதையும் இது நிறுத்தியது” என்று கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் (Gamaleya National Research Center) இயக்குநர் அலெக்ஸாண்டர் ஜின்ஸ்பர்க் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மருத்துவத் துறையில் இந்தக் கண்டுபிடிப்புச் செய்தி ஒரு விவாதப் பொருள் ஆகியுள்ளது.