

நாடறிந்த நல்ல பேச்சாளராக, நற்றமிழ் நாவலராக அறியப்படும் நந்தலாலா தன்னுடைய இலக்கியப் பயணத்தை கவிதையில் இருந்தே தொடங்கினார். பல நூறு கவியரங்கங்களைத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். தலைமைக் கவிதையில் ஒரு முறை “என்னைவிட நல்ல கவிஞர்கள் இங்கே கவிதை பாட இருக்கிறார்கள். ஆனால், என்னைக் கவியரங்கத்தலைவர் என்றார்கள். இது சிட்டுக்குருவியின் தலையில் பட்டு முண்டாசைக் கட்டியது போல் இருக்கிறது” என்றார்.
நந்தலாலாவின் இயற்பெயர் நெடுஞ்செழியன். அவருடைய தந்தை சிங்காரவேலு, ஒரு ரயில்வே துறை ஊழியர். திராவிட இயக்கப் பற்றாளர். இளம் அறிவியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திருச்சி பெல் ஆலையில் பணியில் சேர்ந்த நந்தலாலா, பின்னர் இந்தியன் வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் பல ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், செல்லுமிடமெல்லாம் இலக்கியப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாகவே அவர் எடுத்துக் கொண்டார்.