நம்ப முடியாத எனது நாட்குறிப்பிலிருந்து... - கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதும் புதிய தொடர் | ஓர் அறிமுகம்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
Updated on
2 min read

விடுதலைப் போராட்டம் தொடங்கி இன்று வரை தமிழ்நாட்டுக்கென்று தனித்துவ குணமுண்டு. நாடு விடுதலையடைந்த பின்னர், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, நம்முடைய மாநில எல்லைகளை மீட்டெடுக்க உயிரையும் துச்சமென மதித்து குமரி மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்தனர். சில பகுதிகள் நம் கையை விட்டுப் போயின. இதனால் பல வளங்களை தமிழகம் இழக்க நேரிட்டது. அதன் தொடர்ச்சியாக, முல்லைப் பெரியாறு, காவிரி நீர் பங்கீடு போன்ற 16 நதி தீரங்களின் பிரச்சினைகள் இன்றைக்கும் தொடர்கின்றன.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, விவசாய சங்கப் போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 48 பேர் உயிரிழந்த துயர நிகழ்வுகள், அரசியலை நம்பி கொள்கைக்காக தீக்குளித்தவர்கள் என ஒரு நெடிய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. அதேபோல் உலக அளவில், இந்திய - மாநில அளவில் எத்தனையோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்வதும், இன்றைய தலைமுறைகளுக்கு தெரியப்படுத்துவதும் நமது கடமை மட்டுமல்ல; காலத்தின் கட்டாயமுமாகும். அந்த வகையில், அன்றைய கால தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுகள், அதிரடி மாற்றங்கள், மொழிப் போராட்டங்கள், மாநில எல்லைப் பிரச்சினைகள், மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அரசியல் தீர்வுகள் குறித்தும் விரிவாகவும் தெளிவாகவும் ‘நம்ப முடியாத எனது நாட்குறிப்பிலிருந்து...’ எனும் தொடர் மூலம் எடுத்துரைக்கிறார் வழக்கறிஞரும், அரசியலாளரும், கதைசொல்லி ஆசிரியருமான நண்பர்களால் பாசத்துடன் ‘கே.எஸ்.ஆர்.’ என்று அழைக்கப்படும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

தான் பழகிய காமராஜர், இந்திரா காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கலைஞர், எம்ஜிஆர், வேலுப்பிள்ளை பிரபாகரன், நாராயணசாமி நாயுடு, கம்யூனிஸ்டுகளான பி.ராமமூர்த்தி, சோ.அழகிரிசாமி போன்ற ஆளுமைகள் குறித்தும் பகிர்கிறார்.

தமிழ் இலக்கிய உலகில் நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், அகிலன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் தொடங்கி இன்றைய கோணங்கி, யவனிக்கா ஸ்ரீராம், பத்திரிகை ஆசிரியர்கள் ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், ‘கல்கி’ ராஜேந்திரன், ‘இந்து’ என்.ராம், ‘விகடன்’ பாலசுப்பிரமணியம், ‘தினமலர்’ ராமசுப்பையர், ‘தினகரன்’ கே.பி.கந்தசாமி, இன்றைய ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் மற்றும் ஊடகவியலாளர்கள் பர்கா தத், கார்த்திகைச் செல்வன், ரங்கராஜ் பாண்டே, குணசேகரன், வெங்கட பிரகாஷ் போன்றவர்களுடன் உள்ள தனக்குள்ள நட்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கவுள்ளார்.

மேலும், 1950-களில் இருந்து தன்னுடைய கிராமத்து வாழ்க்கை, பால்ய பருவம், பள்ளி - கல்லூரி கால சம்பவங்களையும், நினைவுகளையும் சுவைபட தமிழக மண் வாசனையோடு, கரிசல் சுவையோடு, நிமிர வைக்கும் நெல்லையின் அடையாளத்தோடு விவரிக்கிறார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இணையப் பக்கத்தில், மார்ச் 8 முதல் வெளியாக உள்ள இந்தத் தொடர், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் நம்புகிறோம். - ஆசிரியர்

| இந்தத் தொடர் வெளியாகும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தின் இணைப்பு > சிறப்புப் பக்கம் |

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in