

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வுகள் துவங்கியுள்ளன. தமிழ் பாடத்துடன் துவங்கியுள்ள தேர்வு 25-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். உயர் கல்விக்குள் நுழைவதற்கான முக்கியமான தேர்வு என்பதால் 12-ம் வகுப்பு தேர்வுக்கு தமிழகத்தில் இல்லந்தோறும் அளிக்கும் முக்கியத்துவம் வேறு எங்கும் காண முடியாதது.
பல்வேறு பணிகளில் இருக்கும் பெற்றோர் கூட தங்கள் பிள்ளைகள் 12-ம் வகுப்புக்கு வந்துவிட்டால், பணி மாறுதல், இட மாறுதல் பெற்றுக் கொண்டு பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தும் நிலையே தமிழகத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்த ரித்திகா (17) என்ற மாணவியின் தந்தை உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அந்த சோகத்திற்கு மத்தியிலும் அந்த மாணவி சீருடையை அணிந்து கொண்டு தேர்வுக் கூடத்திற்கு வந்து 12-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ள காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
அதேபோன்று, கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த 30 வயது பெண் தனது மகள், மகனுடன் சில தினங்களுக்கு முன் தலைமறைவாகி விட்டார். அவர் வீடு திரும்பியதும் விசாரித்தபோது, குடும்பப் பிரச்சினையை சுட்டிக் காட்டுகிறார். உறவினரின் துன்புறுத்தல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். விசாரணை நடத்தும்போது அந்தப் பெண்ணின் மகள் 12-ம் வகுப்பு படிப்பதை அறிந்த காவல்துறை ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, ஒரு பெண் காவலருடன் அந்த மாணவியை தேர்வுக் கூடத்துக்கு அனுப்பி, தேர்வுக் கட்டுப்பாட்டாளரிடமும் பேசி தேர்வெழுத வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
தமிழகத்தில் கல்விக்கு பெற்றோரும், சமூகப் பொறுப்புள்ள அனைத்து தரப்பினரும் அளிக்கும் முக்கியத்துவத்தையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.கல்வி வளர்ச்சியிலும், கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும் தமிழகம் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல. அதேசமயம், நவோதயா பள்ளிகள், பிஎம்ஸ்ரீ பள்ளிகள் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் தமிழகம் பங்கெடுக்காமல் இருப்பது மாணவ சமுதாயத்திற்கான பாதிப்பாகவே அமைகிறது. இதுபோன்ற திட்டங்கள் மத்திய அரசின் செலவில் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பாகும்.
இந்தி திணிப்பு, இந்தி எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை போன்ற விவாதங்களால் இதுபோன்ற திட்டங்கள் மாணவர்களுக்கு சென்றடையாமல் இருப்பது ஏமாற்றமளிக்கும் விஷயமாகவே உள்ளது. கல்வியை முதலிடத்தில் தூக்கிப் பிடிக்கும் மாநிலம் என்ற முறையில், அரசியல் மனமாச்சர்யங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கல்விக்காக மத்திய அரசு தரும் பணம் மற்றும் திட்டங்கள் நம் மாணவர்களை முழுமையாக சென்றடைய என்ன வழி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும்.
தீர்வு காண முடியாத பிரச்சினை என்று எதுவுமே இருக்க முடியாது. கற்றறிந்த கல்வியாளர்கள் உதவியுடன் நமது கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசின் திட்டத்தையும் எப்படி பயன்படுத்துவது, அதற்கு என்னென்ன மாற்றங்களை கோர முடியும் என்று சிந்தித்து செயல்படுவதே அறிவார்ந்த செயலாக அமையும்.