

தொன்மக் கதாபாத்திரங்களுள் மிக முக்கியமான இடம் அகலிகைக்கு உண்டு. காலந்தோறும் அகலிகையின் கதை மீள் வாசிப்புச் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அகலிகையின் கதையை வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் ‘அகலிகை வெண்பா’ என்ற பெயரில் மூன்று காண்டங்களாகப் பிரித்து விரிவாக எழுதியிருக்கிறார். அகலிகையை மணந்துகொள்ள நடைபெற்ற போட்டியில் இந்திரன் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்படுகிறான். அகலிகை மீதுள்ள காமமும் முனிவர்மேல் கொண்ட கோபமும் இந்திரனின் அறிவை மழுங்கச் செய்கிறது. அகலிகையைப் பாலியல் வன்முறை செய்கிறான். ‘நீ மனதால் கற்பிழக்கவில்லை’ என்று கௌதமர் அகலிகையை ஏற்றுக்கொள்கிறார். ஆனாலும் அவளது மன அமைதிக்காகச் சில காலம் கல்லாக இருக்கட்டும்
என்று முடிவெடுக்கிறார். இவ்வாறு காலந்தோறும் அகலிகையின் வரலாற்றின்மீது புனைவுத் தன்மைகள் கூடிக்கொண்டே சென்றிருப்பதை அவதானிக்க இயல்கிறது.
மரபிலக்கியங்கள் அகலிகையைத் தவறு செய்தவளாகத் தொடர்ந்து சித்திரித்துக்கொண்டே வந்திருக்கின்றன. நவீன இலக்கியங்கள், அகலிகை தரப்பு நியாயத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து பேசி வருகின்றன. இவ்வகையில், அகலிகையின் கதைமீதான மரபிலக்கியத்தின் இடைவெளிகளை நவீன இலக்கியங்களே நிரப்பி வருகின்றன. இந்திய மொழிகளில் அகலிகையின் கதை அதிக அளவில் எழுதப்பட்டிருப்பதாக எழுத்தாளர் பிரபஞ்சன் கூறுகிறார். புதுமைப்பித்தனே ‘அகலிகை’, ‘சாபவிமோசனம்’ என்று இரு கதைகளை எழுதியுள்ளார். காவியம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை எனப் படைப்பின் எல்லா வகைமைகளிலும் அகலிகையின் கதை எழுதப்பட்டுள்ளது.