

பேராசிரியர் தொ.பரமசிவன், தமிழ்ப் பண்பாட்டாய்வுகளில் எல்லையில்லாச் சுதேசியத்தைத் தேடியவர். அவர் முன்னெடுத்த ஆய்வு முறைகளும் பல்துறை சார்ந்த நுண்ணாய்வும், அவற்றின் வழி கண்டடைந்த வீச்சுகளும் மிகவும் தனித்துவமானவை. எந்த மேலைக் கோட்பாடுகளிலும் சிக்கிக் கொள்ளாமல் மண் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் பேருண்மைகளைக் காட்டியவர். தமிழியம் சார்ந்த இன்றைய இளம் தலைமுறை ஆய்வாளர் ஒவ்வொருவரும் தொ.ப.வை உள்வாங்க வேண்டியது அவசியமாகும். முன்னுதாரணமில்லா ஆய்வாளர் அவர்.
நுண்பொருள் ஆய்வாளர்: தொ.ப. தமிழ்ப் பண்பாட்டின் விழுமிய நுட்பங்களைப் பேசியவர். காலங்களைக் கடந்து புதைந்து கிடக்கும் வேர்களை அலசி ஆராய்ந்தவர். தமிழ் மரபின் விழுதுகளை விடவும் வேர்களைத் தோண்டி எடுத்தவர். இதில் என்ன இருக்கிறது? சாதாரண விடயம்தானே! என்று நினைக்கின்றவற்றில் நுட்பமான கருத்துகளை எடுத்துக் காட்டியவர்.
அவருடைய பொருள்கோடல் முறை பிரமிக்க வைக்கக் கூடியது. புழங்கு பொருட்கள், சடங்கு சம்பிரதாயங்கள், உணவு, இன்ன பிற பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் வெகு நுட்பமான விசாரணைகளைச் செய்தவர் அவர். பாட்டாளிகள் சமைக்கும்போதே உப்பிட்டுச் சமைப்பார்கள். ஏன் தெரியுமா? வேலை செய்யுமிடங்களில் உப்பைத் தேட முடியாதல்லவா! வசதியான மக்கள் வாழை இலையில் உப்பு பரிமாறி சாப்பிடுவார்கள். உணவு முறையில் சாதியத்தை வெளிப்படுத்தியவர் தொ.ப.