சசிதரூர் அணுகுமுறை: எது அரசியல் நாகரிகம்... முதிர்ச்சி..?

சசிதரூர் அணுகுமுறை: எது அரசியல் நாகரிகம்... முதிர்ச்சி..?
Updated on
1 min read

‘‘எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சியை எப்போதும் எதிர்த்துதான் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.’’ - இதை சொன்னவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். மிகவும் படித்தவர், திறமையானவர். சிறந்த எழுத்தாளர். ஐ.நா.வில் செயலாளர் பொறுப்பு வகித்தவர். நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் இடம்பெற்றவர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் பிரபலமானவர். தற்போது இவருக்கும் கட்சி மேலிடத்துக்கும் உரசல்.

‘‘பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால், இந்தியர்களுக்கு நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. நாட்டின் நலன் கருதி இதை சொல்கிறேன்’’ என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘இடதுசாரி அரசின் பொருளாதார கொள்கைகளால் கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்து வருகிறது’’ என்றார். இதனால் கட்சி மேலிடத்தின் நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.

இதை உணர்ந்த சசிதரூர், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு நான் வேண்டுமானால் வைத்துக் கொள்ளட்டும். வேண்டாம் என்றால் எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனக்கு புத்தகம் உள்ளது. உலகளவில் நான் உரையாற்ற அழைப்புகள் வருகின்றன’’ என்று சர்வ சாதாரணமாக கூறிவிட்டார். உடனே சிக்கலின் தீவிரத்தைப் பற்றி சிந்திக்காமல், அவர் கட்சி மாற போகிறார் என்று ஒரு தரப்பு கூறிவருகிறது.

ஒரு கட்சியில் உள்ளவர் மற்றொரு கட்சியை பாராட்டினாலே, ‘கட்சி தாவல்’ மட்டும்தான் நினைவுக்கு வருமா? வழக்கமான அரசியலில் இருந்து ஒருவர் மாறுபட்டால், கட்சிக்கு துரோகமா? அப்படியானால் மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து சிரித்து மகிழ்ந்த ராகுல் காந்தியை என்ன சொல்லலாம்?

பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இங்கு நினைவுக்கு வந்து செல்கிறார். அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் அவர். அவர் பேச்சில் உறுதி இருந்தது, கண்ணியம் இருந்தது. அந்த ஒழுக்கத்தை அவர் மீறியதில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் திறமையான தலைவர்கள் தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்தால், யாரையும் இழக்காது.

கொள்கைகள் எதுவாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் எல்லை மீறி ஆளும் கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதிக் கொண்டாலும் வெளியில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இயல்பாக நடந்து கொள்கின்றனர். இது வட மாநிலங்களில் தொடக்கத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. இல்ல நிகழ்ச்சிகளில் இருதரப்பினரும் பங்கேற்பதும் நடக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பவர்கள், கருத்துகளை மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

அரசியலில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக சசிதரூர் போல வெளிப்படையான கருத்துகள் அதிகமானோரிடம் இருந்து வரவேண்டும். அப்போதுதான் அரசியல் நாகரிகம், முதிர்ச்சி தெரியும். அதுவரை எல்லோரும் பயணிக்கும் பாதையை விட்டு சரியான பாதையில் ஒருவர் செல்லும் போது வித்தியாசமாகத்தான் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in