

மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகம் 2025ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தின மையக் கருத்தாக ‘இந்திய இளைய சமுதாயம் அறிவியல் - புதுமைத் திறன்களில் உலகத் தலைமையேற்கும் அளவுக்கு வளர்ந்த இந்தியாவை மேம்படுத்தல்’ என்கிற இலக்கை அறிவித்துள்ளது. அறிவியலின் வளர்ச்சிக்குப் புதுமைச் சிந்தனை மிகமிக அவசியம். அதை இந்த அறிவிப்பு சரியாகவே வெளிப்படுத்துகிறது.
இன்று மனித குலம் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறது. இதற்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளைத் தேடிப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். ஒரு பிரச்சினைக்கான தீர்வை இரண்டு பேர் சேர்ந்து யோசிப்பதைவிட, பத்துப் பேர் சேர்ந்து யோசித்தால் மிக விரைவாகவும் மிகப் புதுமையாகவும் தீர்வுகள் கிடைக்கும்.