

‘இது எங்கள் இடம்’ என இணையப் பரப்பை (சைபர் வெளி) அறிவித்த ஜான் பெரி பார்லோவின் (John Perry Barlow) மேற்கோளோடு இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். “உங்களை இங்கு வரவேற்கவில்லை. நாங்கள் ஒன்றுகூடும் இடத்தில் உங்களுக்கு எந்த இறையாண்மையும் இல்லை.” கவிஞர், கட்டுரையாளர், பாடலாசிரியர் எனப் பலவித அடைமொழிகளோடு, இணையவெளியின் தாராளவாதச் செயல்பாட்டாளராகவும் கருதப்படும் பார்லோ, 1996இல், இணையப் பரப்பின் சுதந்திரத் தன்மையை வலியுறுத்தி வெளியிட்ட சைபர் வெளி சுதந்திரப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள வரிகள்தான் இவை.
பார்லோ காலத்தில் இருந்து இணையம் வெகுவாக மாறிவிட்டது என்றாலும், இணைய வெளியின் ஆதாரத்தன்மை மாறிவிடவில்லை. ‘மனதின் புதிய வீடு’ என அவர் வர்ணித்த இணைய வெளி இன்னமும் கருத்துப் பரிமாற்றத்துக்கும், பயனாளிகளின் கூட்டு முயற்சிக்கும், இன்னும் பிற கட்டற்ற சுதந்திரம் சார்ந்த செயல்பாடுகளுக்கான மெய் நிகர் பரப்பாகவே தொடர்கிறது.