

மாவட்டந்தோறும் நடக்கும் புத்தகக் காட்சிகளில் பேச அழைக்கப்படுபவர்கள் குறித்த சர்ச்சைகள் சிலரால் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. உண்மையான ஆதங்கங்கள் கவனிக்கப்பட வேண்டும், நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்தப் பேச்சாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து புத்தகக் காட்சிகளுக்கு எதிரான மனநிலையைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இதன் அபாயம் அவர்களுக்குப் புரியவில்லை. அது புத்தகக் காட்சிகளை ஒழித்துக்கட்டும் இடத்தில்தான் கொண்டுபோய் நிறுத்தும்.
சென்னை புத்தகக் காட்சிக்குப் பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட மாவட்டப் புத்தகக் காட்சி 2006இல் மதுரையில் நடந்த காட்சிதான். இப்போது நிதித்துறை செயலராக இருக்கும் உதயச் சந்திரன் அப்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றினார். அவர்தான் அரசு ஆதரவுடன் மாவட்டங்களில் புத்தகக் காட்சிகளை நடத்துவதற்காக முதற்புள்ளியை வைத்தார். மதுரையில் பிரமாண்டமான புத்தகக் காட்சியை நடத்திக் காட்டினார். அவரைப் பின்பற்றி பெரம்பலூரில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த தாரேஸ் அகமது அந்த மாவட்டத்தில் பெரிய அளவில் புத்தகக் காட்சிகளை நடத்தினார். மாவட்ட நிர்வாகம், உள்ளூர் கல்வி அமைப்புகள், பண்பாட்டு அமைப்புகள் இணைந்து ஒரு புத்தகக் காட்சியை நடத்தும் முன்மாதிரி அப்போதே உருவாக்கபட்டுவிட்டது.
2021இல் அமைந்த மாநில அரசு எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் என்ற மாபெரும் திட்டத்தை அறிவித்தது. பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலில் பொது நூலகத்துறை, மாவட்ட நிர்வாகம், பபாஸி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், உள்ளூர் கலை இலக்கிய அமைப்புகள் இணைந்து இக்காட்சிகளை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு அதற்கு மானியமாக ஒரு பெரும் தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கிவருகிறது. மாவட்டத்தின் அளவுக்கு ஏற்ப 15 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு காட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.