

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’, குற்றவுணர்வால், கழிவிரக்கத்தால் மனித மனங்கள் படும்பாட்டை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் நாவல். ‘ஒரு மரணத்தால் இங்கே ஒன்றும் மாறிவிடப்போவதில்லை’ என்கிற தத்துவ விசாரம் அடிக்கடிச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு மரணத்தால், ஒரு இல்லாமையால் பலதும் நிகழத்தான் செய்கின்றன. ‘சிற்றன்னை’யில் ஒரு மரணம், ஒரு குடும்பத்தையே புரட்டிப்போடுகிறது; இரு பிஞ்சுக் குழந்தைகளை மன ஊனமாக்குகிறது. இன்னொரு மரணத்துக்கும் காரணமாகிறது. இவையெல்லாம் தொந்தரவு செய்யும் ரீதியில் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது.
சிங்காரவடிவேலு ஒரு ஆசிரியர், இயல்பான மனச் சஞ்சலங்கள், கோபதாபங்கள் உள்ளவர். அவரது ஒரு பெரிய வீடு கதையில் சொல்லப்படுகிறது. அந்த வீட்டுக்குள் ஒரு குட்டிப் பெண் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். அவரது மகள்; பெயர் குஞ்சு. மரகதம் என்கிற இளம் பெண் இருக்கிறாள். அவள் யார், அவளுக்கும் சிங்காரவடிவேலுவுக்கும் என்ன உறவு, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கதையோட்டத்தில்தான் பதில் கிடைக்கிறது. இது புதுமைப்பித்தன் கையாண்டிருக்கும் உத்தி. குஞ்சு, புத்திசாலித்தனமான குழந்தை. அதனால் துறுதுறுவென்று இருக்கிறது. களைப்புடன் இருக்கும் அப்பாவுக்கு சித்தியுடன் சேர்ந்து பலகாரத்தைத் தானே எடுத்துவந்து தருகிறது. ‘ஓடி வருகையிலே உள்ளம் குளிருதடி/ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி’ என்கிற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப உச்சி நுகரத் தூண்டும் மழலை அது. சுந்தரவடிவேலுவும் மகளை கூடியமுட்டும் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.