

ஐக்கிய நாடுகள் அவை எடுத்த முடிவின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னே ஒரு வரலாறு இருப்பதை மறுக்க முடியாது. அதேவேளையில், உலகின் பழமையான மொழியாகவும் செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழியாகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகின்ற மொழியாகவும் இருக்கின்ற தமிழ் மொழியைப் போற்றும் வகையில் ஒரு நாள் நமக்குத் தேவை. இதற்கு வலுவான காரணிகள் உண்டு.
மொழிப்போர் வரலாறு: மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் உருது மொழியே ஆட்சி மொழி என்று பாகிஸ்தான் அரசு அறிவித்ததை அடுத்து கடும் முரண்பாடு தோன்றியது. 1952இல், அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்), ‘எங்களுக்கு வங்க மொழியே ஆட்சி மொழி; பாகிஸ்தான் திணிக்கும் உருது மொழியை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது’ என்று அறிவித்து, வங்காளிகள் நடத்திய உருது மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நான்கு மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்கள் உயிர்நீத்த நாளான பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.