

மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளை அழிப்பது தொடர்கதையாகிவிட்டது. மத்திய - மாநில அரசுகள் இதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவத்தில் மங்களூரு பகுதியிலிருந்து வந்து, கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து மலையேறும் இளைஞர்கள் இந்த நிலையை மாற்ற முயற்சிகளை எடுத்துள்ளனர்.
மலைக் கிராமங்களில் பெயருக்குச் சில பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், நிரந்தர ஆசிரியர்கள் கிடையாது. ஜோய்டா வட்டத்தில் மட்டும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் 132 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கின்றன.
ஜோய்டா நகருக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் நாகர்பாவி கிராமம் உள்ளது. இங்கு 35 பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர். மங்களூரு இளைஞர்கள் இவர்களுக்கு பேனா, பென்சில், அழி ரப்பர், டிராயிங் புக், பள்ளிக்கூடப் பைகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் இலவசமாக வழங்குகின்றனர். மலையின் சிறப்பையும் காடுகளின் அவசியத்தையும் எடுத்துரைக்கின்றனர். மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்கின்றனர்.
இளைஞர்கள் செய்வதைப் பார்த்துவிட்டு, மாநில அமைச்சர் ஒருவரும் நான்கு ஆண்டுகளாகக் கல்விச் சாதனங்களைத் தன் செலவில் வழங்கியிருக்கிறார். ஜோய்டா வட்டம் மங்களூரு நகரிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. வெளியூர் ஆசிரியர்கள் பழங்குடி பகுதிகளில் பணிபுரிய விரும்புவதில்லை. பழங்குடிகளில் படித்தவர்கள் அதிகமில்லை. இந்த மாணவர்கள் படித்து வனத் துறையில் அதிகாரிகளானால் வனம் அழிவது நிறுத்தப்படும் என்று இளைஞர்கள் நம்புகின்றனர். மழை பெய்தால் கோணிகளைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு வரும் மாணவர்கள் இப்போது குடைகள், ரெயின்கோட்டுடன் வருவதைப் பார்த்துப் பரவசப்படுகிறார் சான்டி கிராம ஆசிரியர் யஷ்வந்த் நாயக். அடை மழை பெய்தாலும் தவறாமல் பள்ளிக்கூடம் செல்கிறார்கள் இந்த மாணவர்கள்!