

புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் வேலையிழப்பு உண்டாகுமா? மனித உழைப்புக்கு நிகரான ஒன்றைத் தொழில்நுட்பம் மூலம் முழுமையாகச் சாத்தியப்படுத்திட முடியுமா? உழைப்புச் சக்தியின் முக்கியத்துவத்தைத் தொழில்நுட்பம் தகர்த்துவிடுமா? இதுபோன்ற கேள்விகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் எழுச்சி தற்போது எழுப்பிவருகிறது.
சர்வதேசத் தாக்கம்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுவரும் அதிவேக வளர்ச்சி, உலக அளவில் பிரம்மாண்டமான அளவில் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில், இதர சேவைத் துறைகளில் இன்று மனிதர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்பாலான காரியங்களைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்கள் (Intelligent Machines) இன்னும் சில ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.