

உ.வே.சாமிநாதையர் 140 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட ஒரு சென்னைப் பயணம் தமிழுக்கு மறுமலர்ச்சிப் பயணமாக அமைந்தது. உத்தமதானபுரத்து சாமிநாதையர் சென்னையில் வாழ்ந்த காலம் 1903 முதல் 1942 வரை 39 ஆண்டுகள். ‘மாநிலக் கல்லூரி’யில் 1903 நவம்பர் மாதம் ஆசிரியர் பணியை ஏற்ற காலம் முதல் சாமிநாதையர் சென்னையிலேயே வாழ்ந்து இறுதிக் காலத்தைக் கழித்தார். சென்னையில் வாழ்ந்திருந்த காலப்பகுதிதான் அவர் வாழ்க்கையின் செழிப்புமிக்க, சிறப்புமிக்க காலப்பகுதி.
சாமிநாதையரின் முதல் சென்னைப் பயணம் நூற்பதிப்பு சம்பந்தமானது. ‘ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம்’ என்னும் நூலை எழுதிப் பதிப்பித்து வெளியிடும் சூழல், 1885ஆம் ஆண்டு சாமிநாதையருக்கு வாய்த்தது. அந்தக் காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.