சிறப்புக் கட்டுரைகள்
அன்றாடமும் மானுட ஏக்கமும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 11
அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
மானுட உயிரி தன் நரம்பு மண்டலத்தின் நினைவுசேகர ஆற்றலால் புலன் உலகை நிலைப்படுத்தியும், வேறுபடுத்தியும் அறிவதுடன் பிற மானுட உயிரிகளும் பகிர்ந்துகொள்ளும் புலனுலகைக் குறிப்பிடும் வகையில் வேறுபட்ட ஒலி வடிவங்களையும், வரி வடிவங்களையும் தொகுத்து மொழியாக ஒருவரோடு ஒருவர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தன்னையே ‘நான்’ என்று குறித்துக்கொள்ளும் தன்னுணர்வையும் பெற்றது.
