

தமிழவன் ‘போதிமரம்’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ‘போதிமரம்’ என்ற கதையின் தலைப்பே தொன்ம மதிப்புடையது. இந்தக் கதையின் நாயகனுக்குக் கௌதமன் என்று பெயர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாகவும் இவனைக் கருதலாம். இவன் தன் அடையாளங்களை அழிக்க நினைக்கிறான். ஆனால், புறச்சூழல் அதற்கு எதிராக இருக்கிறது. ‘கௌதமன்’ என்ற பெயர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌதம புத்தரையும் அவரது சமயத்தையும் சுட்டி நிற்கிறது. புத்தரின் வரலாற்றையும் இவன் சுமக்க வேண்டியுள்ளது. தமிழவன், புத்தரின் வாழ்க்கையை நிகழ்கால கௌதமனுடன் பொருத்தித் தொன்மக் கதைக்கு நேரெதிராக எழுதியிருக்கிறார்.
புத்தர் தனக்குப் புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இந்தக் கதையின் நாயகன் தன் நிகழ்கால அடையாளத்தை அழிக்க நினைக்கிறான். தன் சான்றிதழில் இருந்து சாதிப் பெயரை நீக்க அரசு அலுவலகங்களுடன் போராடுகிறான். இவனது கோரிக்கை வெவ்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. சாதியை அழித்தல் அவ்வளவு எளிதானது அல்ல என்பதை அரசு இயந்திரங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. இவனை எதிர்கொள்ளும் அந்த அரசு அலுவலரே அப்படி முயன்று தோற்றவராக இருக்கிறார். இந்த யதார்த்தத்தைக் கௌதமனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘நீ பிறப்பிலிருந்து தப்பப்பார்க்கிறாய்’ என்கிறார்கள். இவனது கண்களில் இருந்து வெளிப்படும் கருணையை ஒருவரும் புரிந்துகொள்ள தயாரில்லை.