

சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி புதுவை வில்லியனூரில் ஒரு சுடுமண் சிலைகள் தயாரிக்கும் பட்டறை வைத்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய சுடுமண் ஐயனார் சிலையை இவர் தமிழ் நாட்டில் நிறுவியுள்ளார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் கலைப்பணியாக இதனை முனுசாமி முன்னெடுத்துள்ளார். தன் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி புதுவையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பலருக்கும் இக்கலையைக் கற்பித்து வருகிறார். ஜெர்மனி, கொரியா, அமெரிக்கா முதலான நாடுகளிலிருந்தும் இவரைத் தேடிவரும் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்.
இக்கலையை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து செய்து வருகிறார் இவர். இவருடைய மகன் தற்போது இக்கலை குறித்த லண்டனில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முனுசாமியின் முயற்சியால் வில்லியனூர் சுடுமண் கலைக்கு 2010இல் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. வில்லியனூர் களிமண்ணுக்குத் தனித்தன்மை உண்டு. அருகில் ஓடும் சங்கராபரணி ஆற்றின் களிமண் அலுமினியம், செம்பு, இரும்பு முதலான தாதுக்கள் கலந்தது. இது சுடுமண் சிற்பங்களை வனைவதற்கு ஏற்றதாக இருப்பதாக முனுசாமி கூறுகிறார்.