

ஒரு நல்லாட்சிக்கான இலக்கணம் எது? இதற்குப் பல அளவீடுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அதில் குழந்தைகள் சார்ந்த அளவீடுகள் மிக முக்கியமானவை. ஓர் அரசுக்கு - குழந்தை நேயப்பார்வையும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான - சுதந்திரமான சூழலை உருவாக்கும் ஆற்றலும், குழந்தைகளின் நலம் பேணலும், தரமான இலவசக் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்துதலும், குழந்தைகளுக்கான சட்டங்களைச் சமரசமின்றி நடைமுறைப்படுத்தும் திறனும் இருப்பது அவசியமான அளவீடுகளில் ஒன்றாகும்.
குழந்தைகள் மீதான வன்முறைகளையும், பாலியல்ரீதியான, சாதியரீதியான வன்முறைகளையும் ஓர் அரசு எவ்வாறு குறைத்திருக்கிறது அல்லது கட்டுப்படுத்தியிருக்கிறது, பள்ளி மாணாக்கர்களிடையே சாதியப் பாகுபாடு இல்லாச் சமத்துவச் சிந்தனை உணர்வை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கிறது என்பதெல்லாம் இந்த வரையறைக்குள் அடங்கும்.