கட்டுப்பாடின்றிப் பரவும் ‘வீடியோ கேம்’ நஞ்சு
பள்ளியின் பொதுத் தேர்வுகளும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளும் நெருங்கிவருகின்றன. கைபேசிகளைத் திறன்பேசிகள் (Smartphones) ஆக மாற்றிய பிறகு தெரிந்தோ தெரியாமலோ, இணையக் கல்வி என்கிற பெயரில் தொடக்கப்பள்ளிக் குழந்தைக்குக்கூடத் திறன்பேசிப் பயன்பாட்டைப் பழக்கப்படுத்திவிட்டோம். ‘திறன்பேசி கலாச்சாரம்’ என்றே தனியாகக் குறிப்பிடப்படும் அளவுக்கு இன்று எத்தகைய கயிறும் இல்லாமல் சங்கிலியும் இல்லாமல் குழந்தைகளைச் சிறைப்படுத்திவிட்டோம்.
திறன்பேசிகளின் காரணமாக, நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத விஷயங்கள் நஞ்சாகக் கலந்து ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துக்கொண்டிருக்கின்றன. மிக குறிப்பாக, ‘வீடியோ கேம்ஸ்’ என்றழைக்கப்படுகின்ற கொடூரமான வலைப்பின்னலுக்குள் சிக்கிக்கொள்கின்ற குழந்தைகளை மீட்பது மிக அவசியம். இவ்விஷயத்தில் உடனடியாக நாம் ஏதாவது செய்யவில்லை என்றால், ஒரு சந்ததியை மனநோயாளிகளாக அதிவேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது கல்வியாளர்களின் இன்றைய மிகப்பெரிய கவலை.
