

கிராமப்புறக் குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் வசதியை உறுதிசெய்கிற ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தால் இதுவரை 79.74 சதவீதக் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன என அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் கிராமப்புறங்களில் வாழ்ந்துவரும் சூழலில், அவர்களுக்குக் குடிநீர் கிடைக்க வழிவகை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
குடும்பத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவது பெண்களின் அன்றாட வேலைகளில் முதன்மையானதாக உள்ளது என்றே கூறலாம். கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சினை இன்னும் அதிகம். இந்த நிலையில்தான், கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் பிரத்யேகக் குடிநீர்க் குழாய் இணைப்பு வசதியை அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் பிரதமர் மோடி ஆகஸ்ட் 15, 2019இல் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது 3.26 கோடி குடும்பங்களே இந்த வசதியைப் பெற்றிருந்தன.